ஈரானில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 8 பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் அபாயம் நிலவுவதாகத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்தப் பெண்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்வைத்த கூற்றை ஈரான் நீதித்துறை மறுத்துள்ளது.
ஈரானுடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற, இந்த பெண்களை ஈரான் அரசு விடுதலை செய்யவேண்டும் என்று ட்ரம்ப் தனது “ட்ருத் சோஷியல்” சமூக ஊடக தளத்தில் பதிவிட்டிருந்தார்.
ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட இத்தகவலை மறுக்கும் வகையில், ஈரானிய நீதித்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான மிசான் ஒன்லைன் (Mizan Online) செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
“ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை போலிச் செய்திகளால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார். மரண தண்டனையின் விளிம்பில் இருப்பதாகக் கூறப்படும் பெண்களில் சிலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டாலும், அவர்களுக்கு அதிகபட்சமாக சிறைத்தண்டனை மட்டுமே கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஈரான் மனித உரிமைகள் அமைப்பானது, ஜனவரி மாதம் ஈரானில் நடத்தப்பட்ட போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட பெண்களில் குறைந்தது ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் மற்றொருவர் மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் ட்ரம்ப், ஈரானில் கைது செய்யப்பட்ட 8 பெண்கள் மரண தண்டனை விதிக்கப்படும் அபாயகரமான சூழ்நிலையில் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளமை உண்மைக்கு புறம்பான தகவல் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானில் எட்டு பெண்கள் தூக்கிலிடப்பட வாய்ப்புள்ளதாக ஒரு சமூக ஆர்வலர் ஏற்கெனவே பதிவிட்ட தகவலையே, டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருப்பதாகவும் ட்ரம்ப்பின் பதிவில் பெண்களின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன, அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஈரானிய அதிருப்தியாளர் மாசிஹ் அலிநெஜாட் (Masih Alinejad) ஈரானிய போராட்டங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட எட்டு பெண்களின் பெயர்களையும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த பெயர்ப்பட்டியலில் 16 வயது சிறுமியும் ஒருவர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அவர்கள் அனைவரும் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டவர்கள் என்றும் மாசிஹ் அலிநெஜாட் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஈரானில் கைது செய்யப்பட்ட பெண்களில் இருவர் தொடர்பான விபரங்கள் மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, போராட்ட காலப்பகுதியில் தெஹ்ரானில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தில் இருந்து பாதுகாப்புப் படையினர் மீது கொன்க்ரீட் கற்களை எறிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பீடா ஹெம்மாட்டி (Bita Hemmati) என்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மற்றொரு பெண்ணான 32 வயதுடைய மஹ்பூபே ஷபானி (Mahboubeh Shabani) காயமடைந்த போராட்டக்காரர்களைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றதற்காக “கடவுளுக்கு எதிராகப் போர் தொடுத்தார்” என்ற கடுமையான குற்றச்சாட்டு, அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவர் தற்போது மஷாத் நகரில் உள்ள வகிலாபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவர் மீதான வழக்கு மரண தண்டனையை நோக்கிச் செல்லும் என்ற அபாயகரமான நிலை காணப்படுவதாகவும் ஒரு தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பெண்ணின் புகைப்படம் தற்போது ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஈரான் மனித உரிமைகள் அமைப்பு மற்றும் மரண தண்டனைக்கு எதிரான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 2025ஆம் ஆண்டில் மட்டும் ஈரானில் 48 பெண்கள் உட்பட குறைந்தது 1,639 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற குறிப்பு காணப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக தற்போது நிலவும் போர்ச்சூழலில் சமுதாயத்தில் அச்சத்தை ஏற்படுத்தவும், அரசியல் கைதிகளின் மரண தண்டனைகளை அதிகரிப்பதற்காகவும் ஈரான் அரசாங்கம் மரண தண்டனையைப் பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனர்.

