தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதி தங்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகள் எனக் கூறி, அதனை விடுவிக்கக் கோரி 17 காணி உரிமையாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், குறித்த காணி உரிமையாளர்களின் ஆவணங்களை உறுதிப்படுத்தி, புதிய வரைபடங்களைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை 8 மணி முதல் நில அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்க யாழ். மாவட்ட செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட 17 உரிமையாளர்களுக்கும் விசேட கடிதங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த 17-ஆம் திகதி நில அளவைத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அளவீட்டுப் பணி, அங்கிருந்த பிக்கு ஒருவரின் பொலிஸ் முறைப்பாடு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டது. இந்த இழுபறி நிலையைத் தொடர்ந்து, இன்றைய தினம் மீண்டும் அளவீடுகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்கள் அனைவரும் தங்களது மூல உறுதிப்பத்திரங்களுடன் (Deeds) சம்பவ இடத்திற்கு வருகை தந்து, தத்தமது எல்லைகளை அடையாளம் காட்டுமாறு மாவட்ட செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை தையிட்டி காணி விடுவிப்புப் போராட்டத்தில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version