வடக்கு கிழக்கு மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது.

ஆனால்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதற்கு முன்னர்    இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும்.

 இது தொடர்பில் தேசிய நிறைவேற்று சபையில் இடம்பெற்றுள்ள   கூட்டமைப்பு உடனடி தீர்மானம் எடுக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்ட பின்னர்   இனபபிர்ச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது  கடினமாகிவிடும்.   எனவே  நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயம் இருக்கவேண்டும்.

இந்த விடயத்தை சம்மந்தனும் ரவூப் ஹக்கீமும்   தேசிய நிறைவேற்று சபையில் வலியுறுத்தாவிட்டால்   அது வரலாற்றுத் தவறாகிவிடும் என்றும்  முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலைமையில்  அரசாங்கத்தின் முயற்சிக்கு  அனைத்து தரப்பினரினதும் ஆதரவு கிடைப்பதால்   இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண   அருமையான சந்தர்ப்பம் உள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பம்  இனி கிடைக்காது.   வேண்டுமென்றால் கூடுதலாக  100 நாட்களை   பெற்றுத்தர நான் சுதந்திரக் கட்சிக்குள் போராட தயாராக இருக்கின்றேன் என்றும்  முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கத்தின்  100 நாள் திட்டம் மற்றும்   முன்னைய அரசாங்கத்தின்  தோல்வி என்பன குறித்து   விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இது தொடரபில் மேலும் குறிப்பிடுகையில்

இனவாதம் தோற்கடிப்பு 
கடந்த ஜனாதிபதி தேர்தலில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.     இது தௌிவாக தெரிகின்றது. காரணம் கடந்த அரசாங்கத்தில் பொதுபலசேனா போன்ற அமைப்புக்களின் காரணமாக    மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டது.  அது தேர்தலில் நன்றாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

மைத்திரியின் தலைமை
இந்நிலையில்  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் அவரை சுதந்திரக் கட்சியின்  தலைவராக நியமித்துள்ளோம்.      மைத்திரிபால சிறிசேன தேர்தல் காலத்தில் தான் வெற்றிபெற்றதும் ரணில் விக்ரமசிங்கவை   பிரதமராக நியமிப்பதாக கூறினார்.

எனவே   இதற்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளது.  ஆனால்    ஐக்கிய தேசிய கட்சியை பெரும்பான்மையாகக்கொண்ட  அமைச்சரவை அமைக்கப்படும் என்று   கூறப்படவில்லை.  எனினும்  அதுதான் தற்போது இடம்பெற்றுள்ளது.

கவிழ்க்க முடியும்
ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமானவர்கள் இன்று  அமைச்சர்களாக உள்ளனர்.   இந்நிலையில்       எதிர்க்கட்சியில்  பெரும்பான்மை பலம் உள்ளது. நாங்கள் நினைத்தால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும்.

ஆனால்  100 நாள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு  ஜனாதிபதி எம்மிடம் கோரியுள்ளார். எனவே   100 நாள் திட்டத்துக்கு நாங்கள்  ஆதரவு வழங்குவோம் என்பதுடன்  அரசாங்கத்தை கவிழ்க்க  முயற்சிக்கமாட்டோம் என்பதனையும்  குறிப்பிடுகின்றோம்.

சிறுபான்மை மக்கள்  தீர்மானித்தமை மகிழ்ச்சி 

மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில்     யார் வெற்றிபெறவேண்டும் என்பதனை     நாட்டின் சிறுபான்மை  மக்கள் தீர்மானித்துள்ளனர்.  சிறுபான்மை மக்களுக்கு   அரசியல் தீர்வும் உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்பதனை   தொடர்ந்து வலியுறுத்தி வந்தவன் என்ற நிலையில் இதனை நான்  பாராட்டுகின்றேன்.

 மேலும் வடக்கு கிழக்கு மக்கள் அதிகளவல் வாக்களித்துள்ளனர். இதற்கான     அவகாசத்தை  எமது முன்னாள் அரசாங்கமே   ஏற்படுத்தியது.

நேரடியாக வாக்குகள் தீர்மானிக்கின்றன
ஜனாதிபதி  தேர்தலானது பாராளுமன்றத் தேர்தலை போன்றதல்ல. ஜனாதிபதி தேர்தல் நேரடியாக மக்களின் வாக்குகளினால்  தீர்மானிக்கப்படுகின்றது. ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளினால் கிடைக்கும் எம்.பி. க்களின் எண்ணிக்கையை கொண்டு வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல் 
எனவே ஜனாதிபதி  தேர்தலில் வெறறிபெற வேண்டுமாயின்      சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிகவும் முக்கியம் என்பதனை உணர்ந்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.

எவ்வாறெனினும்  எதிர்வரும்  பாராளுமன்றத் தேர்தலில்   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  தலைமைத்துவத்துடனும்    முன்னாள் ஜனாதிபதிகளான  சந்திரிகா குமாரதுங்க மற்றும் நாமல்    மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின்   ஆலோசனையுடனும் நாங்கள்   வெற்றிபெறுவோம்.

முக்கிய விடயம் என்ன? 
ஆனால்  இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விடயம் ஒன்றுக்கான அருமையான சந்தர்ப்பம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.     நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு     தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு   ஆதரவு வழங்கியுள்ளது.

   

ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை  இல்லாமல்   அரசியலமைப்பின்  13 ஆவது திருத்தச் சட்டத்தை   முழுமையாக அமுல்படுத்துவது  கடினமாகும்.

இந்நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கினால்     அரசியல் தீர்வு விவகாரம் என்பது கேள்விக்குறியாகிவிடும் என்பது  கூட்டமைப்புக்கு புரியவில்லையா? என்பதனை எண்ணி வியக்கின்றேன்.

பேரம் பேசும் சக்தி  
தமது பேரம் பேசும் சக்தியை சிறுபான்மை கட்சிகள் பயன்படுத்துவதற்கான  சிறந்த சந்தர்ப்பமாக     ஜனாதிபதி  தேர்தல் காணப்படுகின்றது.

இந்நிலையில்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை  நீக்கிவிட்டால் அதன் பின்னர்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற சிறுபான்மை கட்சிகள் எவ்வாறு   பேரம் பேசும் சக்தியை பெறும்?  மேலும்  எதிர்காலத்தில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால்    அதனூடாக   சிறுபான்மை கட்சிகள்

அரசியல் ரீதியில் புறக்கணிக்கப்படலாம். 
எனவே   தற்போது செய்யவேண்டிய விடயம் என்னவென்றால்  வடக்கு கிழக்கு மக்களின்   தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு வரலாற்று ரீதியாக கிடைத்துள்ள  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  தீர்வுக்கு சென்றுவிடவேண்டும்.
சம்மந்தன் பதிலளிக்கவேண்டும்

ஆனால் மிக முக்கிய விடயம் என்னவென்றால்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதற்கு முன்னர்    இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும்.    இது தொடர்பில் தேசிய நிறைவேற்று சபையில் இடம்பெற்றுள்ள   கூட்டமைப்பு உடனடி தீர்மானம் எடுக்கவேண்டும்.

அதாவது   வடக்கில்  இராணுவ ஆளுநரை  மாற்றுவது மட்டுமா   தமிழ் மக்களின் பிரச்சினையாக இருந்தது? அப்படியானால்  கடந்த  60 வருடகாலமாக    கோரப்பட்டுவருகின்ற அதிகாரப் பகிர்வுக்கு என்ன நடந்தது?   இந்தக் கேள்விகளுக்கு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் சம்மந்தன் பதிலளிக்கவேண்டும்.

நிகழ்ச்சி நிரலில் முதலில்…  
அரசாங்கத்தின் அதியுயர் அமைப்பான     தேசிய நிறைவேற்று சபைக்கு கூட்டமைப்பின் தலைவர்  சம்மந்தன் சென்று   அமர்ந்துவிட்டு வருவதில்   அர்த்தம் இல்லை.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இது குறித்து சிந்திக்கவேண்டும்.   நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்ட பின்னர்   இனபபிர்ச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது  கடினமாகிவிடும்.   எனவே  நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயம் இருக்கவேண்டும்.

இந்த விடயத்தை சம்மந்தன்  தேசிய நிறைவேற்று சபையில் வலியுறுத்தாவிட்டால்   அது வரலாற்றுத் தவறாகிவிடும்  என்பதனை வலியுறுத்துகின்றேன். காரணம்    நாங்கள்  அனைத்து கட்டங்களிலும்    இனப்பிரச்சினைக்கு   அதிகாரப் பகிர்வில் அமைந்த அரசியல் தீர்வு  காணப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தி வந்துள்ளோம்.

மேலும் 100 நாட்களை தரத் தயார்  
தற்போது நாட்டின் அரசியலில் வித்தியாசமான  சூழல் தோன்றியுள்ளது.    அரசாங்கத்தின் முயற்சிக்கு  அனைத்து தரப்பினரினதும் ஆதரவு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே  அனைத்து  தரப்பினரதும் ஆதரவு  கிடைப்பதால்   இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இதனை விட அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.  இதுபோன்ற சந்தர்ப்பம்  இனி கிடைக்காது.

 எனவே  இவ்வாறு இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தை நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக கொண்டு வந்தால் அதற்கு முழுமையான ஆதரவை நாங்கள் வழங்வுவோம்.  வேண்டுமென்றால் கூடுதலாக  100 நாட்களை   பெற்றுத்தர நான் சுதந்திரக் கட்சிக்குள் போராட தயாராக இருக்கின்றேன் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version