உக்ரைன் நாட்டில் அரசுப்படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே மீண்டும் வெடித்த மோதலில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 45 பேர் பலியாகியுள்ளனர்.
உக்ரைனில் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டு கிளர்ச்சியால் சுமார் 5300 பேர் பலியாகியுள்ளனர். இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இன்று பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள கிரானட்டார்ஸ்க் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் நேற்று நடத்திய ராக்கெட் தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் பலியாகினர். பொதுமக்களில் 11 பேரும் உயிரிழந்தனர்.
கிழக்கு உக்ரைனில் உள்ள ராணுவ தலைமையகத்தின் மீது இன்று காலை நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 8 பேரும், டானெட்ஸ்க் பகுதியில் நிகழ்ந்த மோர்ட்டார் தாக்குதலில் 7 பேரும் பலியானதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சுமார் 80 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.