சிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்ப்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அவசர படபடப்பில் மறந்த நிலையில் ஏனைய போராளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.

வரதன் என்று அழைக்கப்பட்ட வரதரஜப்பெருமாள் சிறையில் இருந்த வரை எந்தவொரு இயக்கத்திலும் உறுப்பினராக இருக்கவில்லை.

அவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் தம்மோடு சேருமாறு டக்ளஸ் தேவானந்தா கேடிருந்தார். எனினும் சிறைக்கு வெளியே வந்து முடிவு தெரிவிப்பதாக வரதன் பதில் சொல்லியிருந்தார்.

அமெரிக்காவுக்கு சென்று மேலும் கல்வி கற்கவும் வரதன் விரும்பியிருந்தார்.

அழகிரி ஈரோஸ் அமைப்பை சேர்ந்தவர்.  ஈரோஸ் அமைப்பை அப்போது ஏனைய இயக்கத்தினர் கணக்கில் எடுப்பதில்லை.

இருவரும் அந்த நேரத்தில் முக்கியமற்றவர்களாக இருந்தமையால் அவர்கள் இருவரையும் நினைவில் வைத்து ஏனைய போராளிகள் தேடவும் இல்லை. மறந்தே போனார்கள்.

ஏனையோர் தப்பிச் சென்றுவிட்டார்களே இப்போது என்ன செய்வது என்று வரதனும், ஆழகிரியும் தவித்துப் போயினர்.

அந்த நேரத்தில் சிறையை அண்மித் திருந்த வாவி வழியாக ஒரு படகில் மூன்று போராளிகள் தப்பிச் செல்ல முயன்று கொண்டிருந்தனர்.

அவர்கள் தமிழ் ஈழ இராணுவம் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள்.

தம்பாப்பிள்ளை மகேஸ்வரன், காளி, சுப்பிரமணியம் ஆகியோரே அந்த மூவர்.

சிறை உடைப்புக்கு திட்டமிட்ட போதே தாம் மூவரும் வாவி வழியாக படகில் தப்பிச்செல்லப் போவதாக தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் கூறியிருந்தார்.

ஏற்கனவே அவர்கள் ஏற்பாடு செய்தபடி படகு வந்து தயாராக நின்றது.

வாவியை நோக்கி ஓடிய வரதனும், அழகிரியும் தம்மையும் அழைத்துச் செல்லும்மாறு கேட்டனர். படகில் அவர்களோடு தப்பிச் சென்றனர்.

முதல் நடவடிக்கை :

50 போராளிகள் சிறை உடைப்பின் காரணமாகத் தப்பிச் சென்றனர்.

இலங்கையின் வரலாற்றில் முதலாவதாக நடைபெற்ற பாரிய சிறை உடைப்பு நடவடிக்கை மட்டக்களப்பு சிறை உடைப்புத் தான்.

வெலிக்கடை சிறைப் படுக்கொலைக்கு ஒரு பதிலடியாகவும் இது அமைந்தது.

45 பேர் வேன் மூலமாகவும், 5 பேர் படகு மூலமாகவும் தப்பிச் சென்று காட்டுக்குள் மறைந்தனர்.

அரசு அதிர்ந்தது, சிறை உடைப்பு நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.

 

images

மிகையான செய்திகள் :

சிறை உடைப்பு தொடர்பாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் சில ருசிகரமானவை.

‘நீர்மூழ்கிக் கப்பல்’ மூலமாக போராளிகள் தப்பிச் சென்றுவிட்டதாக பத்திரிகைகளில் செய்தி படித்து மக்களுக்கு வியப்பு.

தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி ”நீர்மூழ்கிக் கப்பல்” வைத்திருக்கும் அளவுக்கு போராளிகள் வளர்ந்து விட்டார்களே என்று நினைத்து தான் அந்த மகிழ்ச்சி.

இன்னொரு வேடிக்கை சிறைக்குள் செருப்புக்களை வெட்டி துப்பக்கிபோல செய்து வைத்திருந்தனர்.

பார்த்தவுடன் கைத்துப்பாக்கி என்று சிறைகாவலர்களை மிரள வைக்கத்தான் அந்த ஏற்பாடு.

உள்ளே தருவிக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் போதாது என்பதால் தான் இந்த போலி ஆயுதங்கள்.

துப்பாக்கி போல தயாரிக்கப் பட்ட செருப்பு ஒன்றைக் கண்ட நிருபர் ஒருவர் பத்திரிகைக்கு  அனுப்பிய செய்தி இது:

“கைதிகள் தப்பிச் செல்லும்போது இயந்திரத் துப்பாக்கி ஒன்றை சிறைக்குள் தவறவிட்டுச் சென்றுள்ளனர்.”

தாக்குதல் நடவடிக்கைகளின் பின்னர் இவ்வாறு மிகைபடுத்தப்பட்ட செய்திகள் வருவது வழக்கம்தான்.

நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டமே மிகைப்படுத்தல் என்று தெரியும்.  தமக்குள் சிரித்துக் கொள்வார்கள்.

காட்டுக்குள் முரண்பாடு :   

மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பிய 45 போராளிகளும் காட்டுப் பாதை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அவ்வாறு செல்லும்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப் போராளிகளுக்கும், புளொட் போராளிகளுக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றிவிட்டன.

அதனால் இடைநடுவில் இரு அமைப்பினரும் வெவ்வேறு பாதைகள் வழியாக பிரிந்து தப்புதல் பயணத்தை தொடர்ந்தனர்.

காட்டுப்பாதை முடிய அடுத்த பயம் படகு மூலமாக தமிழ் நாட்டுக்கு என்று திட்டமிடப்பட்டது.

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப். பிடம் அப்போது சொந்தமாக ஒரு படகு கூடக் கிடையாது.

படகு வாடகைக்கு அர்த்தலாம். அதற்க்கு பணம் வேண்டும்.

வாடகை, டீசல் மற்றும் செலவுகளுக்கு குறைந்தது பதினைந்து ஆயிரம் ரூபா என்றாலும் தேவை.

பத்து ரூபாய்க்கு கூட அல்லாடிக் கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் யாழ் பிராந்திய கமிட்டி திகைத்து போய்விட்டது.

இது தவிர ஆயுதப் பயிற்சிக்கும் தமிழ்நட்டிடுக்கு ஆட்களை அனுப்பவும் படகு தேவை, பணம் தேவை.

தபல்நிலையக் கொள்ளை :

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் முன்பாக இருந்தது பிரதான தபாலகம்.

அங்கு பணம் இருப்பதாக தகவல். பொலிஸ் நிலையமோ முன்னால் இருக்கிறது, கஷ்ட்டமான சூழல்தான். ஆனால் வேறு வழியில்லை.புகுந்தனர் ஏழு பேர், ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட சிறு சிறு பைகளில் பிரித்து பணத்தைக் கட்டி வைத்திருந்தனர்.

ஒவ்வொரு பையாக தபாலக உழியர்களை வைத்து பிரித்து பணத்தை திரட்டியெடுக்க ஒரு மணிநேரமானது.

மேலும் பணம் தேவை வங்கிகளுக்கு பலத்த பாதுகாப்பு. பாதுகாப்பை உடைக்க தலைமையிடம் தேவையான ஆயுதம் கேட்டும் கிடைக்கவில்லை. இருந்தால் தானே கொடுப்பதற்கு?

‘மாட்டிக்கொண்டால் இயக்கப் பெயரை கூறுவதில்லை தனிப்பட்ட தேவைக்கு என்று தான் வாக்குமூலம் கொடுப்பது’ என்ற முடிவோடு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கூட்டுறவுக் சங்கங்களில் கொள்ளையடிக்கப்பட்டது.

ஒரு காரைக் கடத்திக்கொண்டு ஒரே நாளில் பண்டத்தரிப்பு, கொக்குவில், உரும்பிராய் தபாலகங்களில் கொள்ளையிடப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் அனைத்திலும் ரமேஷ், சுபத்திரன், மோகன், இந்திரன், சுதன். இளங்கோ ஆகியோர் கொண்ட 7 பேர் குழுவே பங்குகொண்டது.

தடுமாற்றம் :

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கும், மானிப்பாய் வங்கியில் நிதி பறிப்பில் ஈடுப்படவும் இவர்கள் தயாரான போது யாழ் பிராந்திய ஈ.பி.ஆர்.எல்.எஃப் கமிட்டியில் இருந்த சிலர் அதனை விரும்பவில்லை.

ரமேஷ் சில காலம் தமிழ் நாட்டில் சென்று தங்கியிருக்க வேண்டும் என்றும். அவர் யாழ்ப்பாணத்தில் இருந்தால் மக்கள் விடுதலைப் படை நடவடிக்கைகளை தம்மால் நிறுத்த முடியாமல் போகும் என்றும் யாழ் பிராந்திய கமிட்டி செயலாளராக இருந்த செழியனால் மத்திய குழு உறுப்பினர் குணசேகரனிடம் தெரிவிக்கப்பட்டது.

இதைவிட வேடிக்கை- நிதி தேவையானபோது தம்மால் எதுவும் செய்ய முடியாமல் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் யாழ் பிராந்திய கமிட்டி, தேவை அனைத்தும் முடிந்த பின்னர்தான் கொள்கை நடவடிக்கைகளை விமர்சித்தது.

பயிற்சிக்கு ஆட்களை அனுப்புவதும், வேறு பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்களை தங்க வைப்பது. தமிழ் நாட்டுக்கு அனுப்புவது, நிதித் தேவைகளை கவனிப்பது, யாழ்ப்பாணத்தில் பயிற்சிக்கு ஆட்களைத் தெரிவு செய்வது.

உளவுப் பிரிவு நடவடிக்கைகள் என்று சகல பொறுப்புகளையும் 83ம் ஆண்டுநெருக்கடியான காலகட்டத்தில் ரமேஷ் – சுபத்திரன் ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டே சமாளித்தனர்.

போர்க்குணமின்மை, முந்திக்கொள்ள முயலாமை, நிலைமைக்கு ஏற்ப செயற்படாமை, தயக்கம் காரணமான ஜனநாயக வாய்வீச்சுக்கள், சரியானவர்களை இனம்காண முடியாமை போன்றவற்றால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்குள் ஒரு சாரார் தடுமாறிக் கொண்டிருந்தனர்.

உரிமைகோரலில் போட்டி :

மட்டக்களப்பு சிறை உடைப்பு நடவடிக்கையை தமிழ்நாட்டில் இருந்து புளொட் அமைப்பினர் உரிமை கோரினார்கள்.

இதனையடுத்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பினரும் “நாம் தான் சிறையை உடைத்தோம்” என்று தனித்து உரிமை கோரினார்கள்.

இந்தப் போட்டி உரிமை கோரல் யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்தது.

யாழ்பாணத்தில்  “புளொட்”     அமைப்பை விட  ஈ.பி.ஆர்.எல்.எஃப்  பிரச்சாரமே மக்களிடம்  எடுபட்டது.
சிறையிலிருந்து  எப்படி தப்பித்தோம்? என்று  தமிழ  நாட்டில்  யூனியர் விகடன் சஞ்சிகைக்கு  டக்ளஸ்  தேவானந்தா  விபரித்திருந்தார்.

அந்த பேட்டியின்  “போட்டோ ஸ்ரட்”  பிரதிகளை   யாழ்பாணம்  எங்கும்  ஈ.பி.ஆர்.எல்.எஃப்  சுவரெட்டியாகத்  தயாரித்து ஒட்டியிருந்தது.

மக்கள் கூட்டமாக நின்று அவற்றை வாசித்தனர்.

கூட்டு நடவடிக்கையாக  உரிமை கோரியிருக்க    வேண்டிய  நடவடிக்கை  இயக்கப் போட்டிகள் காரணமாக   உண்மைக்கு மாறான   உரிமை கோரலாகியது.


சுவரொட்டி பிரச்சாரம்
இந்த இடத்தில்  ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின்  சுரொட்டிப்  பிரச்சாரம்  பற்றிக் குறிப்பிட்டாயாகவேண்டும்.

அந்த நேரத்தில் துப்பாக்கியோடு  மாட்டினால்  படையினரால்  எப்படியான  கவனிப்பு கிடைக்குமோ  அதே கவனிப்புதான் சுவரொட்டியோடு       மாட்டிக்கொண்டாலும் கிடைக்கும்.

சுவரொட்டி ஒட்டும்போது  படையினரது கண்ணில் பட்டால்  உடனே சுட்டுத்தள்ளவும்  படையினர் தயங்குவதில்லை.

யாழ்பாண நகரில் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த புளொட் உறுப்பினர்கள்   அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

யாழ்பாணம் பொது மருத்துவமனைக்கு பின்புறம்  உள்ள சுவரில்  ஈ.பி.ஆர்.எல்.எஃப்  போடும்   சுவரொட்டி   வெகு பிரசித்தம்.

45 தாள்ளகள்   சேர்ந்த பிரமாண்டமான  சுவரொட்டி அது. அதனை ஒட்டி முடிக்க     குறைந்தது அரைமணி  நேரம் தேவை  ஏணியும் கொண்டு வரவேண்டும்.

யாழ்பாண பஸ்நிலையத்திலிருந்தும், வெலிங்டன் தியேட்டரிலிருந்தும்  நோட்டம் செலுத்திக்கொண்டிருப்பர் சில உறுப்பினர்கள்.

பொலிஸ் ஜீப் அல்லது  இராணுவ  ட்ரக்வண்டி  விசில்  மூலம் சைகை செய்யவேண்டியது அவர்களது பொறுப்பு.

சன நடமாட்டம் உள்ளபோதே  ஒட்டி முடித்து விடவேண்டும். இல்லாவிட்டால் சுலபமாக  படையினரால் இனம் காணப்படும் அபாயம் ஏற்படும்.

சுவரொட்டி ஒட்டுவது ஒரு போராட்டம் போலவே  யாழ் குடாநாடெங்கும்  நடந்து முடியும்.

புலிகளமைப்பின்  இரு முக்கிய  உறுப்பினர்களான  சீலன், ஆனந்தன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தி  ஈழமாணவர் பொது மன்றம்  என்ற பெயரில்   ஈ.பி.ஆர்.எல்.எஃப்  வெளியிட்ட சுவரொட்டி  குறிப்பிடதக்கது.

சுவரொட்டிகளுக்கான வாசகங்களை தயாரிப்பாளர்கள்  தயாபரன், செழியன், நிரூபன்,டேவிறசன்  ஆகியோர் அழகான பெரிய எழுத்துக்களில் சுவரொட்டியாக்குவார்கள்.

உடனடியாக  யாழ் குடாநாடெங்கும்  சுவரொட்டி வினியோகிக்கப்பட்டு  இரவோடு இரவாக ஒட்டப்படும்.

இந்த சுவரொட்டிகள்  முதலில்  ஈழமாணவர்  பொதுமன்றம் தொடர்பாகவும், பின்னர்  ஈ.பி.ஆர்.எல்.எஃப்  தொடர்பாகவும் இடதுசாரி தோற்றப்பாட்டை  உருவாக்கின. பெரும் எதிர்பார்ப்பையும் தோற்றுவித்தன.

இந்த பிரசார நடவடிக்கைகளுக்கு மூல காரணமாக இருந்தவர்களில் ரமேஷ் ஈ.பி.டி.பி.யிலும், சிறீதரன் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பிலும் இருக்கின்றனர், ஏனையோர் ஒதுங்கிச் சென்றுவிட்டனர்.

இந்தியப் பயிற்சி :

இந்திய அரசு ஈழப் போராளிகள் அமைப்புக்கள் ஐந்துக்கு ஆயுதப் பயிற்சியளிக்க முன்வந்தமை பற்றி முன்னர் கூறியிருந்தேன்.

புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளொட், ரெலோ, ஈரோஸ் ஆகிய அமைப்புக்களது பயிற்சி முகாம்கள் தமிழ் நாட்டில் இருந்தன.

அந்த பயிற்சி முகாம்களில் இருந்து இந்தியாவின் உத்தர பிரதேசப் பகுதிக்கு போராளிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஒவ்வொரு இயக்கத்திற்கும் தனித் தனியாக வெவ்வேறு இடங்களில் வைத்தே பயிற்சியளிக்கப்பட்டது.

பாலங்களை தகர்ப்பது, பொருளாதார மையங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்றவற்றை குண்டுவைத்து சிதைப்பது போன்ற கருத்துக்கள் இந்திய பயிற்சியாளர்களால் நடத்தப்பட்ட இராணுவ வகுப்புக்களில் விளக்கப்பட்டன.

இலங்கையில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பற்றிய விபரங்களை போராளிகள் மூலமாக அறியவும் இந்தியப் பயிற்சியாளர்கள் முயன்றனர்.

கிட்டுவின் அழுகை :

புலிகள் அமைப்பினர் பொன்னம்மான் என்றழைக்கப்படும் குகன் தலைமையில் இந்திய பயிற்சிக்கு சென்றார்.

பயிற்சிக்கு சென்றவர்களில் ‘கிட்டு’வும் ஒருவர். உத்திர பிரதேசம் குளிர் பிரதேசம். சூழ்நிலைக்கு பழக்கப்படும் வரை போராளிகளுக்கு நோய் – நொடிகள்.

புலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிக்கும்பொறுப்பாளராக இருந்தவர் இந்திய இராணுவ கேணல்.

அவர் போராளிகள் மீது மீக பரிவோடும் பாசத்தோடும் நடந்து கொண்டார்.

பயிற்சிகள் முடிவடைந்து விடைபெறும் நேரம். இந்திய கேணலுக்கு கண்கள் கலங்கிவிட்டன. போராளிகள் கண்களிலும் குளம்.

கிட்டு ஓடிச் சென்று இந்திய கேணலின் மடியில் புரண்டு விம்மி அழத் தொடங்கிவிட்டார்.

கண்ணீரோடு விடைபெற்று சென்னை வந்தனர். சென்னை அடையாரில் புலிகளது அலுவலகம் இருந்தது.

தமது அனுபவங்களை புலிப் போராளிகள் பிரபாவிடம் கூறினார்.

அதனைக் கேட்டு விட்டு சிறிது நேர மௌனத்தின் பின்னர் பிரபா கூறியது இது!

“நாங்கள் ஒரு நோக்கத்திற்காகப் பயிற்சி எடுக்கப் போனோம்; அவர்கள் (இந்தியா) வேறு ஒரு நோக்கத்திர்ககப் பயிற்சி தந்திருக்கிறார்கள்.

எங்களுடைய நோக்கத்திற்கு எதிராக என்றோ ஒரு நாள் அவர்களது இராணுவம் திரும்பினால், இதே கேணலுடன் சண்டை பிடிக்கும்படி கிட்டுவுக்கு நான் உத்தரவிடுவேன். கிட்டுவும் சண்டை பிடித்தேயாக வேண்டும்.”

கிட்டுவும், மற்றவர்களும் திகைத்துப் போனார்கள். அவர்கள் இந்தியாவை நம்பியிருந்தவர்கள். அதனால் தான் திகைப்பு.

இதே போல இன்னொரு முக்கிய சம்பவம். அதுவும் பிரபாவின் வித்தியாச அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டுதான். அதை அடுத்தவாரம் சொல்கிறேன்.

(தொடரும்)

அற்புதன் எழுதுவது.

 

மட்டக்களப்பு சிறை உடைப்பு: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-23

கலைஞரும் டெலோவும், எம்.ஜி.ஆரும் புளொட்டும் கூட்டணி!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை:22)

 

சிறைக்குள் சிந்திய புனித இரத்தம் : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-21

Share.
Leave A Reply

Exit mobile version