செங்கோட்டை: செங்கோட்டை அருகே ஆசிரியையுடன் மாயமான மாணவர் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடையநல்லூர் போலீசார் மாணவரை தேடி அங்கு விரைந்துள்ளனர்.
இப்பள்ளியில் கடையநல்லூரைச் சேர்ந்த 15 வயது மாணவர் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அந்த ஆசிரியையும், மாணவனும் நெருங்கிப் பழகியுள்ளனர். ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி திடீரென இருவரும் அவரவர் வீடுகளில் இருந்து மாயமாகி விட்டனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கோதைலட்சுமி மாணவனோடு காதல் வயப்பட்டதால், விதவிதமான போட்டோக்களை எடுத்து வைத்துள்ளார்.
மேலும் மாணவனின் அழகில் மயங்கி அவரோடு அடிக்கடி பேசி கொண்டிருந்ததோடு, அவரை அழைத்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்றதால் பள்ளி நிர்வாகம் அவரை எச்சரித்துள்ளது.
அதை இருவரும் கண்டு கொள்ளாததால் சில தினங்களுக்கு முன்பு கோதைலட்சுமியை பணியில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கியது.
இந்நிலையில் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டாலும், மாணவனுடனான நட்பை ஆசிரியை கோதை லட்சுமி தொடர்ந்த வண்ணம் இருந்துள்ளார்.
மாணவன் 10ம் வகுப்பு தேர்வுகளை முழுமையாக எழுதட்டும் என இருவரும் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு தேர்வுகள் மட்டுமே எழுதி முடித்த நிலையில், உறவினர்கள் நெருக்கடி காரணமாக மாயமாகி விட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிகழ்வுகளால் இருவரது குடும்பத்தினரும், அவர்களது உறவினர்களும் தற்போது தவிப்பில் உள்ளனர். இதுகுறித்து புகார் அளித்த மாணவர் குடும்பத்தினர் தற்போது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டதாக தெரிகிறது.
இதற்கிடையில், மாணவரும், ஆசிரியையும் சென்னை அருகே கும்மி டிப்பூண்டியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அய்யப்பன் தலைமையிலான தனிப்படையினர் மாயமான மாணவரை தேடி அங்கு விரைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்பில் பரவும் வதந்திகள்
பள்ளி மாணவன் ஆசிரியையோடு மாயமான இந்த சம்பவம் குறித்து பல்வேறு வதந்திகள் வாட்ஸ் அப்பில் பரவிய வண்ணம் உள்ளன.
முதல் நாள் சம்பந்தமில்லாத இருவரது படங்கள் மாணவன், டீச்சர் எனக்கூறி தமிழகம் முழுவதும் உலா வந்தன. அந்த படங்களை பார்த்து பலர் உண்மை என நம்பினர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று மாணவனையும், ஆசிரியையையும் வெட்டிக் கொலை செய்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்த வேறொரு கொலை சம்பவம் குறித்த படங்களை வாட்ஸ் அப்பில் வெளியிட்டனர். அதையும் பலர் நம்பி ஏமாந்து விட்டனர்.