இந்தோனேஷியாவில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு உலகின் பல பாகங்களிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அவுஸ்திரேலியர்களான மயூரன் சுகுமாரன் (34), அன்ட்ரூ சான் (31), நைஜீரியாவைச் சேர்ந்த மார்ட்டின் ஆண்டர்சன் (50), ரஹீம் சலாமி (50) , சில்வெஸ்டர் வொலிசே (47), ஒக்வூடிலி ஒயடான்ஸே (41), இந்தோனேஷியாவைச் சேர்ந்த செய்னல் அபிதீன் (50) பிரேஸிலைச் சேர்ந்த ரொட்ரிகோ குலார்ட் ஆகியோருக்கு இந்தோனேஷிய நேரப்படி புதன்கிழமை அதிகாலை துப்பாக்கிக் குழுவினரால் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்களுடன் சேர்த்து மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த பிலிப்பைன்ஸை சேர்ந்த மேரி வெலோசோ என்பவர் மாத்திரம் தண்டனை நிறைவேற்றப்படுவதிலிருந்து இறுதி நேரத்தில் தப்பினார்.
போதைப் பொருள் பெண்ணொருவருவருக்கு மாத்திரம் நேற்றுமுன்தினம் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
போதைமருந்தை கடத்துவதற்கு மேரி ஜேன் வெலொசோவை தான் பயன்படுத்திக் கொண்டதாக கூறி, பெண் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து இவரின் மரணதண்டனை நிறைவேற்றம் ஒத்திவைக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட மேற்படி 8 பேரில் மயூரன் சுகுமாரன் , அன்ட்ரூ சான் ஆகியோர் பாலி நைன் என குறிப்பிடப்படும் 2005 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட 9 பேர் கொண்ட குழுவின் அங்கத்தவர்களாவர்.
இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்கு அவுஸ்திரேலியா கடுமையாக பாடுபட்டது. தண்டனை நிறைவேற்றப்படுவதை தாமதிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையையும் நிராகரித்து.
ஆனால், அவுஸ்திரேலிய பொலிஸார் வழங்கிய தகவலின் மூலமே மேற்படி 9 பேரையும் இந்தோனேஷிய அதிகாரிகள் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான தந்தையே இக்கடத்தல் விடயம் அம்பலமாகுவதற்கு அடித்தளம் அமைத்தவர்.
இக்குழுவைச் சேர்ந்த ஸ்கொட் ரஷ் எனும் இளைஞர் 2005 ஆம் ஆண்டு 19 வயது இளைஞராக இருந்தார். அவரிடம் பணமோ கடவுச்சீட்டோ இருக்கவில்லை. அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதை அவரின் தந்தையான, லீ ரஷ் அறிந்திருந்தார்.
2005 ஏப்ரலில் ஸ்கொட் ரஷ், இந்தோனேஷியாவின் பாலி தீவுக்குச் செல்லப்போவதை லீ ரஷ் அறிந்தார். தனது மகன் பணத்துக்காக போதைப்பொருளை கடத்திவரக்கூடும் என லீ ரஷ் அஞ்சினார்.
அதையடுத்து, தனது நண்பரான சட்டத்தரணி ரொபரட் மையர்ஸுன் லீ ரஷ் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
அதையடுத்து அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து ரொபர்ட் தெரிவித்தார்.
ஸ்கொட் ரஷ், அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்படுவதை தடுப்பதே அவரின் தந்தையினதும் தந்தையின் நண்பரான ரொபர்ட் மையர்ஸினதும் நோக்கமாக இருந்தது.
ஸ்கொட் ரஷ்ஷை தாம் தடுப்பதாக ஏ.எவ்.பி எனக் குறிப்பிடப்படும் அவுஸ்திரேலிய சமஷ்டி (மத்திய) பொலிஸார் உறுதியளித்தனர் என ரொபர்ட் கூறுகிறார்.
ஆனால், அவுஸ்திரேலிய ஊடகங்களின் தகவல்களின்படி நடந்தது வேறு. ஸ்கொட் ரஷ் அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்படுவதை தடுப்பதற்குப் பதிலாக, போதைப்பொருள் கடத்தல் சாத்தியம் குறித்து இந்தோனேஷிய பொலிஸாருக்கு அவுஸ்திரேலிய பொலிஸார் இரகசிய தகவல் கொடுத்தனர்.
9 தினங்களின்பின் 2005 ஏப்ரல் 17 ஆம் திகதி, இந்தோனேஷியாவின் பாலி தீவிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கிச் செல்வதற்காக ஸ்கொட் ரஷ்ஷும் மேலும் நால்வரும் பாலி தீவின் டென்பாஸர் விமான நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது, அவர்களின் உடலைச் சுற்றி ஹெரோயின் போதைப்பொருள் பொதிகள் மறைத்துவைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இந்தோனேஷிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அன்ட்ரூ சான், செகாஜ், ரெனி லோரன்ஸ் எனும் பெண், மார்ட்டின் ஸ்டீபன்ஸ் ஆகியோரே ஸ்கொட் ரஷ்ஷுடன் கைது செய்யப்பட்ட ஏனைய மூவராவர்.
இந்நால்வரிடமிருந்தும் 8.3 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி 31 இலட்சம் அமெரிக்க டொலர்களாகும்.
இந்நால்வரும் கைது செய்யப்பட்ட பின்னர், இந்தோனேஷிய பொலிஸார் விடுதியொன்றில் மேற்கொண்ட சுற்றிவளைப்பொன்றின்போது மயூரன் சுகுமாரன், சீ யீ சென், டான் டுக் தான்ஹ் குயென், மத்தியூ நோர்மன், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நால்வரினதும் உடலில் ஹெரோயின் போதைப்பொருள் பொதியை சுற்றிக்கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு டேப் மற்றும் எஞ்சிய போதைப்பொருள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த 9 பேரும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் இவர்களே பாலி நைன் என சுருக்கமாக குறிப்பிடப்பட்டனர்.
அவுஸ்திரேலிய பிரஜைகள் 9 பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவுடன் இவ்விடயத்தில் அவுஸ்திரேலிய பொலிஸாரின் பங்களிப்பு குறித்து சர்ச்சை எழுந்தது.
போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கும் நாட்டிடம் தனது பிரஜைகள் 9 பேர் சிக்குவதற்கு வழிவகுத்ததாக அவுஸ்திரேலிய பொலிஸார் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
13.02.2006 ஆம் திகதி லோரன்ஸ், ஸ்கொட் ரஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மறுநாள் செகாஜ் மற்றும் ஸ்டீபன்ஸுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அன்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் ஆகியாருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
டென்பாஸர் மாவட்ட நீதிமன்றத்தில் விதிக்கப்பட் முதல் மரண தண்டனை தீர்ப்பு இதுவாம். இக்குழுவின் ஏனைய 3 அங்கத்தவர்களான நோர்மன், சென், குயென் ஆகியோருக்கு 15.02.2006 ஆம் திகதி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்களில் 7 பேருக்கு மேன்முறையீடுகளின் பின், ஆயுள் தண்டனை, மரண தண்டனை, மீள ஆயுள் தண்டனை என தீர்ப்புகள் மாறி அளிக்கப்பட்டன. இவர்கள் 7 பேருக்கும் இறுதியில் ஆயுள் தண்டனை அல்லது 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்பின்னரே இவ்விருவரையும் மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என கடந்த பல வருடங்களாக கோசங்கள் எழுப்பப்பட்டு வந்தன.
தமது குற்றச்செயல்களை ஒப்புக்கொண்டிருந்த மயூரனும், அன்ட்ரூ சானும் சிறையிலிருந்தபோது மிகவும் திருந்தியவர்களாக காணப்பட்டனர்.
ஏனைய கைதிகளுக்கு, கணினி, ஆங்கிலம் போன்றவற்றை கற்பித்தும் வந்தனர். அவர்களை சிறைக்குள் சமூக தலைவர்களாக சிறையதிகாரிகள் நியமித்திருந்தனர்.
சில வருடங்களுக்குமுன் இவ்விருவரும் அளித்த செவ்விகளில் தாம் கைது செய்யப்பட்டமையானது தவறுகளை உணர்ந்து திருந்திக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியது எனத் தெரிவித்திருந்தனர்.
அவுஸ்திரேலியாவில் கடவுச்சீட்டு அலுவலகத்திலும் பின்னர், தபால் அலுவலகத்திலும் பணியாற்றியவர் மயூரன் சுகுமாரன், விரைவாக பணம் சம்பாதிப்பதற்காக ஆசைப்பட்டு இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட தாம் தீர்மானித்தாக கூறினார்.
இரவு விடுதிகளுக்குச் செல்பவர்கள், அழகான பி.எம்.டபிள்யூ, மேர்சிடிஸ் கார்களை வைத்திருக்கிறார்கள், அவர்கள் அழகான பெண்களுடன் இருக்கின்றனர். நானும் கார் வாங்க வேண்டும் என விரும்பினேன்” என மயூரன் சுகுமாரன் 2010 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.
திருந்திவிட்ட தம்மை கொல்லாமல் உயிர்வாழ அனுமதிக்க வேண்டும் என்பதே இவ்விருவரினதும் கோரிக்கையாக இருந்தது.
இவர்களை விடுவிப்பதற்காக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் உட்பட பலரும் கோரினர். இந்தோனேஷிய சிறை அதிகாரிகளுக்குகூட இவர்களின் மரண தண்டனையை குறைப்பதில் ஆட்சேபம் இருக்கவில்லையாம்.
ஆனால் இந்தோனேஷிய ஜனாதிபதி, ஜோகோ விடோடோ விடாப்பிடியாக இருந்தார். போதைப் பொருள் பயங்கரத்துக்கு எதிராக இந்தோனேஷியா போராடுவதாக கூறிய அவர், போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மன்னிப்பளிக்க தான் தயாரில்லை என்றார்.
அதையடுத்து, கடந்த புதன்கிழமை அதிகாலை மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான், உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மௌனம் கலையும் அவுஸ்திரேலிய பொலிஸார்
இந்நிலையில் பாலி நைன் விவகாரத்தில் அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாரின் பங்களிப்பு வெளிப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக அவுஸ்திரேலிய நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் முன்னிலையின் அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்குமுன் இவ்விடயம் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் மறுத்திருந்த போதிலும், விரைவில் இது தொடர்பான செய்தியாளர் மாநாடொன்றை நடத்தவுள்ளதாக அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸ் பேச்சாளர் ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.