உலகின் முதன்மையான நாகரிகங்களில் ஒன்றான யூப்ரடிஸ் – டைகிரீஸ் நதிக்கரை நாகரிகம் முதல் சுமேரிய நாகரிகங்கள் வரை ஈராக்கில்தான் தோன்றின.
ஈராக் என்ற நாடு, மனித குல நாகரிக வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பங்கு மகத்தானது.
கல்வியிலும் பண்பாட்டிலும் ஒட்டுமொத்த உலகுக்கும் வழிகாட்டியாக இருந்த ஈராக் நாட்டின் நிலப்பரப்பை, மெசபதோமியா என்கிறது வரலாறு.
ஆனால் இன்றைய ஈராக், ஒரு சுடுகாடு!
எங்கும் துப்பாக்கிச் சத்தம், மரண ஓலங்கள், பிணக் குவியல்கள். எப்போது என்ன நடக்கும், எதுவரை நாம் உயிரோடு இருப்போம்… எதுவும் ஈராக் மக்களுக்குத் தெரியாது. இப்போது நம்மை ஆட்சி செய்வது யார்? அரசாங்கமா… புதிய பயங்கரவாதக் குழுவா… என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது.
மொத்தத்தில் மத்திய கிழக்கின் நீண்டகால பதற்றப் பகுதியான ஈராக், இப்போது மறுபடியும் கொலைக்களமாகி உள்ளது.
ஈராக்கில் நடைபெற்று வரும் சிக்கல், தற்போது ஆரம்பித்தது அல்ல. அதற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு.
சதாமின் காலத்தில் இருந்து ஈராக்கில் சுன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையில் கடும் மோதல்கள் நிலவி வருவதை உலகம் அறியும்.
சுன்னி- ஷியா பிரிவினருக்கு இடையிலான வெறுப்பு உணர்வு ஈராக் மக்கள் மனங்களில் ஆழ விதைக்கப்பட்டுவிட்டது.
மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்திருந்த மேற்குலகம், ஆரம்பத்தில் சதாமின் செயலுக்கு தூபம் போட்டு வளர்த்துவிட்டது. பிறகு அவரது அதே செயற்பாடுகளைக் குற்றம் எனக் காரணம்காட்டி சதாமை தூக்கிலும் போட்டது.
ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி 2003ஆம் ஆண்டு அமெரிக்கா, ஈராக் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது. மிகவும் வெளிப்படையான அந்த ஆக்கிரமிப்புக்கு உலகம் தழுவிய எதிர்ப்புகள் எழுந்தன.
ஈராக்கில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டாலும் அங்கு குண்டு சத்தம் ஓயவில்லை. அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் கிளர்ச்சிகள் வெடித்தபடியே இருந்தன. அதில் மதவாத இயக்கங்களின் பங்கு மிக அதிகம்.
அந்த நாட்டின் பண்பாட்டு வாழ்க்கையில் மதம் பிரிக்க முடியாத அம்சம் என்பதால், அதை ஒட்டியே அனைத்தும் நடைபெற்றன.
சதாமின் ஆட்சிக் காலத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டனர்.
இந்தப் பின்னணியில், தற்போது ஈராக்கின் பல பெரிய நகரங்களைக் கைப்பற்றி கொடியை பறக்கவிட்டிருக்கின்றனர் ஐ.எஸ். அமைப்பினர்.
இது ஒரு கடும்போக்கு சுன்னி முஸ்லிம் இயக்கம். திடீரென ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கிளம்பிய இந்த இயக்கம், அல்-கொய்தாவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் என்றும், தாங்கள் ஒரு நாடு கடந்த சர்வதேச இயக்கம் எனவும் அறிவித்துக்கொண்டது.
ஷியா பிரிவு முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று ஒழிப்பதன் வழியே இந்த இயக்கம் பிரபலம் அடைந்தது. இதன் மூலம் சுன்னி முஸ்லிம்கள் மத்தியில் தன் ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்தியது.
ஈராக், சிரியா நாடுகளின் சில பகுதிகளை ஒருங்கிணைத்து கடும்போக்கு இஸ்லாமியப் பிரதேசம் ஒன்றை உருவாக்குவது இந்த அமைப்பின் இலட்சியம்.
சிரிய நாட்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது அங்கு நிலைகொண்டிருந்த இந்த இயக்கம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஈராக்கில் ஊடுருவத் தொடங்கியது.
இந்த அமைப்பில் ஜிஹாதிகளாகச் சேர விரும்புவோருக்கு, தேச எல்லைகள் ஒரு நிபந்தனை அல்ல. இதனால் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
ரமாடி, ஃபலூஜா எனப் படிப்படியாக ஒவ்வொரு பகுதியாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது இந்த இயக்கம்.
இதனால் ஈராக் அதிபர் நூரி அல் மாலிகி, அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளார்.
ஐ.எஸ். அமைப்பை எதிர்கொண்டு சமாளிக்கும் பலமற்றதாக இருக்கிறது ஈராக் இராணுவம். அதாவது அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்ட ஈராக் இராணுவத்தால், முந்தா நாள் முளைத்த தீவிரவாதிகளைக்கூட எதிர்த்து நிற்க முடியவில்லை.
பல பகுதிகளில் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டுப் பின்வாங்குகின்றனர் அல்லது சரண் அடைந்துவிடுகின்றனர்.
இதற்கிடையில் ஷியா பிரிவு முஸ்லிம் அமைப்புகள் தன்னிச்சையாக ஆயுதக் குழுக்களை உருவாக்கி, ஐ.எஸ். அமைப்புக்கு எதிராகச் சண்டையிடத் தொடங்கியுள்ளனர்.
சாத்தியம் உள்ள இடங்களில் இவர்களும், அரசப் படைகளும் இணைந்துகொள்கின்றனர். சில இடங்களில் ஐ.எஸ். அமைப்பினர் கைப்பற்றிய பகுதிகளைத் திரும்பவும் இவர்கள் மீட்டுள்ளனர்.
எனினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த உள்நாட்டு யுத்தத்தில் தீவிரவாத அமைப்பினரின் கைகளே ஓங்கியுள்ளன.
இதுவரை சுமார் 5.5 இலட்சம் மக்கள் நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறி உள்ளனர். யுத்தம் நீடிக்கும்பட்சத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். மனிதர்களை விரட்டி அடித்துவிட்டு, மிஞ்சியவர்களைக் கொன்றுவிட்டு, இயற்கை வளங்களைச் சிதைத்துவிட்டு…
எதை அடைய இந்த யுத்தம்?
சுடுகாட்டை ஆட்சி செய்யவா!?
-எஸ்.ஜே.பிரசாத்