அதே வரதட்சணை – சீதனப் பிரச்சினைதான். ஆனால் இங்கு மாப்பிள்ளையின் தாயார் பென்ட்லி கார் ((Bentley) (பென்ஸ் காரைவிட விலை அதிகம்) கேட்பதில்லை.
பிரைவேட் ஜெட் வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை. மாறாக பெண்ணின் தாயார் கேட்கிறார். இஸ்லாமிய வரதட்சனை முறை அதுதான்.
பெண்ணிற்கு தான் பொன் கொடுக்க வேண்டும். அடடா நாமும் அந்த பகுதியில் பிறந்திருக்கலாமே என்று நம் பெண்கள் சிலர் பெருமூச்சு விடலாம்.
வேண்டாம். இலக்கம் (பல மனைவிகள்) பெரும்பாலும் ஒன்றோடு நிற்பதில்லை.
திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணிற்கும் இடையே ஏற்படும் பந்தம் – உறவு என்று மட்டும் அராபிய கலாசாரம் பார்ப்பதில்லை.
மாறாக அது இரு குடும்பங்களின் இணைப்பாகவே கருதப்படும். அன்று பெண்களுக்கு 15, 16 வயதே திருமண வயதாக கருதப்பட்டது. 20 வயதில் ஓரிரு குழந்தைகளுக்கு தாயாகி விடுவர். தாயும் மகளும் ஒரு குடும்பத்தில் ஒரே நேரத்தில் குழந்தை பெறுவது அன்று சாதாரணம்.
பையனுக்கு பெண் தேடும் தாயார் பிற திருமணங்களுக்கு வரும் இளம் பெண்களையும் நோட்டம் விடுவார்.
மணமகன் தெரிவில் அவனது நற்குணம், அவனது வம்சம் – குலம், சமூக அந்தஸ்து முதலியன பிரதானமாக கவனத்திற்கு எடுக்கப்படும். பின்பு இரு குடும்பத்தாரும் மணமகளுக்கு வரவேண்டிய சீதனம் பற்றிப் பேசுவர்.
அன்றைய அராபியர் தங்கம், வெள்ளி, ஒட்டகம், பட்டு, பலவித அத்தர் மற்றும் வாசனைத் திரவியங்களைக் கேட்பர்.
இன்றைய கணனி உலகில் காலத்திற்கேற்ப பொருட்களைக் கேட்பதோடு ரொக்கமாக பெரும் பணமும் கேட்கின்றனர். திருமண விருந்து வைபவங்களுக்கும் பெரிய அளவில் செலவழிக்க வேண்டி உள்ளது.
அடிப்படை நோக்கம் தன மகளை வசதியான குடும்பத்தில் சேர்க்க வேண்டும் என்பதோடு, எவ்வளவு அதிகம் சீதனம் வாங்குகிறார்களோ மாப்பிளை வீட்டார் எவ்வளவு அதிகம் செலவளிக்கிறார்களோ அவ்வளவிற்கு மணப் பெண்ணின் மதிப்பு கூடும். பெற்றவர்களுக்கும் அது பெருமை யைத்தரும்.
இவர்கள் சொந்தத்திற்குள்ளேயே திருமணம் செய்ய அதிகம் விரும்புவர். காரணம் சொத்து வெளியே செல்லாததோடு அது இரட்டிப்பாகும் என்பதால். பொருளில்லார்க்கு பெண் இல்லை என்பதே அன்றும் இன்றும் சவூதியில் யதார்த்தம்.
சீனா, ஜப்பானில் சில காதலர்கள் வருடக் கணக்கில் காதலித்துக் கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு பெற்றோர்களின் ஆசியும் இருக்கும்.
கேட்டால், திருமண விருந்திற்கு, புதுக் குடித்தனம் போவதற்கு காசு சேர்த்துக் கொண்டு இருக்கிறேன் என்பார் காதலர். காதலியும் ஆமாம் என்பார்.
லைலா மஜ்னு கதையை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள். இது கதையல்ல நிஜம். இதில் காதலி லைலா என்றும் காதலன் மஜ்னு என்றும் தான் பெயர் குறிப்பிடப்பட் டிருக்கும்.
தவறு. காதலனின் உண்மை பெயர் இப்னு அல் முலவ்வாஹ் இப்னு முசாஹிம் என்பதாகும். ஏழாம் நூற்றாண்டில் நடந்த சம்பவம் இது.
ஆடு மேய்ப்பவனாகவும் கவி பாடுவதில் வல்லவனாகவும் இருந்த முசாஹிம் தனது குலத்தைச் சேர்ந்தவளும் சிறு வயது சிநேகிதியுமான அழகி லைலா பின்த் மஹதி இபுன் சய்யத் மீது காதல் கொண்டான்.
ஆனால் லைலாவின் குடும்பத்தவர் இவன் பொருளாதார ரீதியில் சிறந்தவன் அல்ல என்று மறுத்து, அவளை ஏற்கனவே வேறொரு இளைஞனுக்கு ஒப்பந்தம் செய்து விட்டோம் என்று கூறவே மனமுடைந்த முசாஹிம் ஊர் ஊராக பாலைவனத்தில் பைத்திய மாக சுற்றி மரணமடைந்தான்.
திருமணமான லைலாவால் முசாஹிம்மை மறக்க முடியாது தடுமாறினாள். நோயுற்றாள். அவள் கணவன் அவளை ஈராக்கிற்கு சுமந்து சென்றான். அங்கு அவள் மரணமானாள்.
லைலாவையே நினைத்து பைத்தியமாகி சுற்றியதால் முசாஹிம், மஜ்னு பைத்தியக்காரன் என்று அழைக்கப்ப ட்டான். அதுவே அவனது பெயராக மாறிவிட்டது.
சமீபத்தில் மன்னர் அப்துல் அசீஸ் பல்கலைக்ழகம் நடத்திய ஆய்வு ஒன்றின்படி, சவூதியில் பெரும்பாலான ஆண் பெண்கள் 30 வயது வரை பொறுத்திருக்கிறார்கள் பொருத்தமான துணை கிடைக்கும் வரை, அல்லது திருமணமே வேண்டாம் என்று வாழத் துவங்கி விடுகிறார்கள் என்று அல் ஷரக் என்ற பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
திருமணத்தைப் பற்றி 45 விதமான தவறான கருத்துக்கள் மக்களிடையே இருப்பதால் சவூதியில் சுமார் 20 லட்சம் பெண்கள் திருமணம் செய்யாது தனித்து வாழ்கிறார்களாம்.
30 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 33.4% விகிதம் திருமணம் செய்யவில்லை. பெற்றோரோடு வசிக்கும் பெண்களுக்கு வீட்டில் செல்லம் அதிகம். தனி அறை, தனி வேலைக்காரி என்ற சொகுசு வாழ்க்கை உண்டு.
அவை போக, தொழில் குறிக்கோள், சமூக அந்தஸ்து குறைவு, சில உடல் அல்லது மனப் பிரச்சினை, குடும்ப பொறுப்பு எடுப்பதில் இருக்கும் பயம், தாம் அறிந்த வேறு தம்பதிகளின் தகராறுகள், அல்லது சகோதர – நண்பிகளின் மணமுறிவு, மகிழ்ச்சி இல்லா வாழ்க்கை போன்றவைகளும் இளவயதினரிடம் திருமண ஆசையை இல்லாமல் ஆக்கிவிடுகிறது என்கின்றனர்.
சில பெண்கள் குழந்தை பருவத்தில் இருந்து தாங்கள் வளர்ந்த சூழலில் மாற்றத்தைக் காண விரும்புவதில்லை.
புதிய குடும்பம், புதிய மனிதர்கள் என்று பரீட்சித்துப் பார்க்கப் பயப்படுகிறார்கள். மேலும் பெண்கள் இன்று கல்வி கேள்விகளிலும் பல தொழில் துறைகளிலும் முன்னேறி இருப்பதால், அன்று 15 வயதில் பெற்றோர் சொல்லியவனுக்கு கழுத்தை நீட்டியதுபோல் இன்று இவர்கள் தயாரில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப பொறுப்பு என்று ஒன்று இல்லை. மனைவி இலக்கம் ஒன்றுக்குமேல் (ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் ஒருவரா..) போவதை பட்டம் படித்த பெண்கள் பலர் அவ்வளவாக விரும்புவதில்லை.
ஆகவே கன்னிய ராக வாழ்வதை அவர்கள் குறையாக நினைப்பது மில்லை. இந்நிலை பெற்றோர்களையும் அரசையும், ஒரு பெண்ணின் பிந்திய நாட்களை நினைத்து கவலை அடையச் செய்துள்ளது என்பதே உண்மை.
இதேவேளை சவூதியில் இப்போது திருமணத்துக்கு முன்பு மருத்துவ சான்று பெற வேண்டும் என்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
இதன்படி திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். தனிப்பட்ட முறையில் அவர்களது தேக ஆரோக்கியம் பல முனைகளில் – அறிந்த அறியாத பல நோய்களுக்காகப் பரிசோதிக்கப்படுகிறது.
பின்பு இருவரது இரத்தமும் ஒத்துப்போகிறதா, பிறக்கும் குழந்தை எந்த உடல் பாதிப்பும் இல்லாமல் பிறக்குமா என்று சோதிக்கப்படுகிறது.
இந்த இடத்தில் பலருக்கு எதிர்முனை பதிலே கிடைக்கிறது. 65% விகிதமான நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் தங்கள் இரத்தம் பொருந்தவில்லை என்று திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள்.
திட்டமிடல் அமைச்சின் தகவல்படி 14 இலட்சம் ஆண்களும் 6 இலட்சம், பெண்களும் தாமதமாக 30 வயது அளவிலேயே திருமணம் செய்துள்ளனர்.
ஆண்களில் பெரும்பாலானோர் பொருளாதாரச் சுமையே திருமண தாமத்திற்கு முக்கிய காரணம் என்கின்றனர். சவூதி ஆண்கள் தங்கள் நாட்டு பெண்களைத் திருமணம் செய்வதையே அதிகம் விரும்புகிறார்கள்.
ஆனால் அவர்கள் எட்டாக்கனியாக மாறியதும், இவ்வாறு பொருளாதார வசதி குறைந்த இளைஞர்கள் தங்களுக்கு சொந்த நாட்டில் பெண் கிடைப்பது கஷ்டம் என்று முடிவு கட்டி வேறு அரேபியா நாடுகளில் உள்ள பெண்களைத் திருமணம் செய்கிறார்கள்.
இதனை அரசு அவ்வளவாக விரும்பவில்லை. மாற்று வழிகளைத் தேடுகிறது. அரசு பொறுப்பில் கூட்டு திருமணங்களைச் செய்யலாமா என்றும் யோசிக்கிறார்கள்.
அரசு எடுக்கும் முயற்சிகளால் சவூதியில் தாதமாகும் திருமணங்கள் விரைவு படுத்தப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
எம். எஸ். ஷாஜஹான் … –