இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதை அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.
அந்த முன்னணியின் தலைவரும் நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளை அடுத்தே தமது கட்சி அவர்களுடன் இணைந்து போட்டியிடும் முடிவை எடுத்தனர் என அவர் கூறுகிறார்.
இலங்கையின் கிழக்கே குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எட்டப்பட்டது எனவும் சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடாவிட்டாலும், தற்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழலை மனதில் வைத்தே இம்முறை போட்டியிடும் முடிவு எடுக்கப்பட்டது எனவும் அவர் மேலும் கூறினார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமது கட்சியின் சார்பில் எட்டுபேர் போட்டியிடவுள்ளதாக கூறும் அவர், அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு தாங்கள் வாய்ப்பளிக்க முன்வந்த போதிலும் அவர் அதற்கு இணங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
-BBC செய்தி-