யாழ்ப்பாணம் கொக்குவில் ரபேல் பிள்ளை பிலிப் ஜெயநாயகம் என்பவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் எதிரிக்கு 12 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி ரபேல் பிள்ளை பிலிப் ஜெயநாயகம் என்பவரை சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்பினால் பிடரியில் அடித்துக் கொலை செய்ததாக, இராமநாதன் கைலாசபிள்ளை என்பவருக்கு எதிராக யாழ் மேல் நீதுpமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பில் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது:

குற்றவாளியாகிய எதிரிக்கு உச்சத் தண்டனை வழங்கப்பட வேண்டும். கைமோசக் கொலை புரிந்து ஓர் உயிரை இந்த உலகத்தில் இருந்து பிரித்தமை மோசமான குற்றச் செயல். இதற்குக் கருணை காட்டக்கூடாது.

ஒரு பெண்ணை விதவையாக்கி பிள்ளைகளை அனாதைகளாக்கிய செயலாக இதனை மன்று கருதுகின்றது. எதிர்காலத்தில் குற்றம் செய்பவர்களுக்கு ஓர் அனுபவப் பாடமாகவும், ஓர் எச்சரிக்கை மணியாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே குற்றவியல் கோட்பாடுகளின்படி, நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை விதிக்கின்றன.

சமூகத்தில் குற்றச் செயல்களைக் குறைக்க வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அந்த சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே கடுமையான தண்டனை விதிகளைக் கொண்ட குற்றவியல் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கொலைக் குற்றவாளிக்கு அவர் செய்த குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். இதன் மூலம், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஒரு மரணத்திற்கு நீதி கிடைத்துள்ளது என்ற கருத்து ஏற்படுத்தப்பட வேண்டும்.

குற்றத் தண்டனை தீர்ப்புக்கள் சமுதாயப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி குற்றவாளிகளை சமூகத்தில் இருந்து பிரித்து வைப்பதற்கே வழங்கப்படுகின்றன.

இந்த வழக்கில் வழக்குத் தொடுனர் தரப்பின் முதலாம் சாட்சியும் ஐந்தாம் சாட்சியும் கண்கண்ட சாட்சிகளாவர். ‘தொலைந்து போ’ எனக்கூறி எதிரி சைக்கிள் பம்பினால் இறந்தவருக்கு பின்பக்கமாக பிடரியில் தாக்குதல் நடத்தியமை குற்ற எண்ணத்தின் பாரதூரத் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.

இதில் எதிரியினுடைய குற்ற எண்ணமும் தெளிவாகக் காணப்படுகின்றது, எனவே, இந்தக் கைமோசக் கொலைக் குற்றச்சாட்டில் எதிரியை மன்று குற்றவாளி என காண்கின்றது.

அவர் புரிந்து குற்றத்திற்காக குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறையும், 25 ஆயிரம் ரூபா தண்டமும் தண்டனையாக விதிக்கப்படுகின்றது.

தண்டப் பணத்தைச் செலுத்தத் தவறினால் ஒரு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

தீ;ர்ப்பினையடுத்து குற்றவாளி சிறைச்சாலை அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு, யாழ் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மைக்காலமாக பொலிசார் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதிலும், குற்றங்களுக்கு, சிறைத்தண்டனை உட்பட தண்டனை வழங்குவதே சரியான பதிலாக இருக்க முடியும்.

அப்போதுதான் குற்றம் செய்பவர்களின் அடி வயிற்றில் வலியேற்படும். இவ்வாறான தண்டனைகளே, எதிர்காலத்தில் குற்றம் செய்பவர்களுக்கு சரியான பாடமாக அமையும் என்பது சட்ட வல்லுனர்களின் முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version