இறுதி யுத்த காலப்பகுதியில் மனித உரிமைச்சம்பவங்கள் மீறப்பட்டமை அனைவரும் அறிந்த விடயமே எனினும் குற்றவாளிகளை இனங்காண்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுபதும் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் பெரும் சவாலாக அமைந்து வந்திருந்தது.
எதிர்பார்புக்களை ஏராளமாக கொண்டு தமிழ் மக்களும் ஆட்சி மாற்றமொன்றை விரும்பியிருந்தார்கள். மலர்ந்த புதிய ஆட்சிமாற்றமும் சுயாதீன நீதி ஆணைக்குழுக்களையும் காணாமல்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களையும் நிறுவி இலங்கையின் நீதித்துறையை ஒருபடி மேலுயர்தியிருந்தது.
இதன் ஒரு கட்டடமாகவே சர்வதேச விசாரணை என்கின்ற ஒன்று அவசியமற்றது என தெரிவித்து உள்ளக விசாரணையை ஆமோதித்திருக்கிறது.
ஐநா அறிக்கைகள் இலங்கை நீதித்துறைக்கு சவால்விடுத்துவரும் நிலையில் இலங்கை நீதித்துறை தொடர்பில் நம்பிக்கையினத்தையே தமிழர் தரப்பில் ஏற்படுத்தி வருகின்றது இதுவே நாட்டு நடப்பாக இருந்துவருகின்ற நிலையில் மைத்திரி ஆட்சியிலும் நீதித்துறை சுயாதீனமாக இயங்குகிறதா? என்பது சிறுபான்மை இனத்தவர்களிடை சந்தேகங்களை ஏற்படுத்திவருகிறது. வலுச்சேர்பதாக பல சம்பவங்களும் பதிவாகியிருக்கிறது.
அவற்றில் ஒன்றுதான் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரால் கொலை செய்யப்பட்டார் என சந்தேகிக்கப்படும் பிரபல்ய ரக்பி வீரர் வசீம் தாயூடினின் கொலை விசாரணைகள்.
அப்படியென்ன விசாரணைகளில் இடம்பெற்றது? என்கின்ற சந்தேகம் நிச்சயமாக உங்களுக்கு எழும். அதுதான் பாதுகாக்கப்பட்டுவந்த வசீம்தாயூடினின் முக்கிய உடற்கூற்று பாகங்கள் திருடப்பட்டதாக தற்போது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு நாட்களின் பின்னர் தாயூடின் பயணித்த வாகனத்தின் முக்கிய சில பாகங்களும் களவாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நீதித்துறையில் சந்தேகத்தை வலுக்கச்செய்திருந்தாலும் தாயூடின் ஒரு முஸ்லீம் என்ற ரீதியில் ஏனைய இனங்கள் இதனை முக்கியத்துவம் கொடுக்க தவறிவரலாம் ஆனால் அவ்வாறானதோர் நிலைமை தாயூடினுக்கு மட்டுமல்ல இன்று வித்தியாவிற்கும் ஏற்பட்டிருக்கிறது.
தடயங்கள் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டிருப்பதாக ஊர்காவற்துறை நீதிமன்றில் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் தற்போது அறிக்கையிட்டிருக்கின்றனர்.
இவ்வாறானதோர் இலங்கையின் நீதித்துறையின் அறிமுகத்துடன் கடத்தப்பட்டு , கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட வித்தியாவின் கொலை தொடர்பான புலனாய்வுக்குள் செல்ல முயல்கின்றேன்.
வித்தியாவின் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன என்னதான் நடக்கின்றது என்கின்ற கேள்வி பலர் மத்தியில் இருக்கிறது. இந்த கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் கனம் நீதிபதி எஸ்.லெனின் குமார் முன்னிலையில் வழக்கு எண் MC/KAYTS/116/2015 இல் இடம்பெற்று வருகின்றது.
01. வித்தியாவிற்கும் விஜயகலா , துவாரகேஸ்வரன் மற்றும் வி.ரி தமிழ்மாறன் போன்றோருக்கான தொடர்பு என்ன?
02. சிரேஸ்ட சட்டத்தரணி தவராஜா வழக்கு விசாரணைகளிலிருந்து திடீரென விலகியமைக்கு காரணங்கள் என்ன?
03. பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட சந்தேகநபர் எவ்வாறு கொழும்பு வந்தார்? குற்றவாளியல்ல விடுதலை செய்தோமென பொலிஸார் தெரிவித்ததன் உண்மை நிலை என்ன?
04. வித்தியா கொலையில் சுயாதினமாக செயற்பட்டதா இலங்கை பொலிஸ் பிரிவு?
05. வித்தியாவினுடைய கொலையும் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலும் தொடர்பு என்ன?
06. புங்குடுதீவு மற்றும் வித்தியா குடும்பம் சந்தேகநபர்களுக்கு சாதகமாகிவரும் நிலைமைகள் என்ன?
07. சகோதரனால் முதலாவதாக இனங்காணப்பட்டு அவராலே சடலம் மூடப்பட்ட நிலையில் எவ்வாறு நிர்வாணமான நிலையில் புகைப்படங்கள் ஊடகங்களிலும் வெளிவந்தன? அடையாளப்படுத்தப்பட முன்னரா? அன்றேல் பின்னரா? இவை எடுக்கப்பட்டன சம்மந்தப்பட்டவர்கள் யார்?
இவ்வாறான அடிப்படை சந்தேகங்களை ஒவ்வொன்றாக ஆராய முற்படுவதற்கு முன்னர் இலங்கை நீதிமன்ற சட்ட நடவடிக்கைகள் எவ்வாறு வித்தியா வழக்கில் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது என்கின்ற விளக்கத்தை இவ் அத்தியாயத்தில் வழங்க முனைகிறேன்.
தொடர்ந்துசெல்லும் ஆராய்வுகளில் உங்களுக்கு மிக்க உதவியாகவும் பூரண விளக்கத்தை வழங்கும் என்பது எனது திடமான நம்பிக்கை.
விசாரணையை துரிதப்படுத்துமாறு சமூக அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன இதற்கு வலுச்சேர்பதாய் 4.1/2 வயது நிரம்பிய சேயாவின் கொலையும் அமைந்திருக்கிறது.
எனினும் யாழிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி விசேட நீதிமன்று ஒன்றை அமைத்து விசாரணைகளை துரிதப்படுத்துவதாய் ஆறுதலளித்திருந்தார் ஆனாலும் ஆறு மாதகாலமாகியும் அவை ஆரம்பிக்கப்படவில்லையென நாடாளுமன்றத்தில் அனுரகுமார திஸ்ஸ நாயக்காவும் கெள்வியெழுப்பியிருந்தார்.
குற்றச்செயல்கள் எந்தளவுதுாரம் பாரதூரமானவையாக அமையப்பெற்றாலும் அவை முதற்கட்டமாக நீதவான் நீதிமன்றங்களில்தான் விசாரணை செய்யப்படுவதே வழமை.
குறித்த குற்றச்செயல் தொடர்பில் போதிய ஆதாரங்கள் மேலதிக விசாரணைக்காக காணப்படுகிறது என நீதவான் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவை மேல் நீதி மன்றத்திற்கு மேலதிக விசாரணைக்காகவும் தண்டனைக்காகவும் அனுப்பி வைக்கப்படும்.
சேயா கொலை வழக்கில் பாடசாலை மாணவர் ஒருவர் நிரபராதியாக நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர் நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதை இங்கு உதாரணமாக்கி வித்தியா கொலை தொடர்பில் பூரணமான ஆதாரங்கள் சந்தேகநபர்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்படும் வரை அவை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இவர்களுக்கான தண்டனை வழங்கப்படமாட்டாது இங்கு சான்றுகள் சேகரிக்கப்பட்டு யாழ் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளமையை இங்கு விளங்கிக்கொள்ளவேண்டும்.
வித்தியா கொலையை இரண்டாக நோக்க முடியும் ஒன்று கற்பழிப்பு (கூட்டு வன்புணர்வு) இரண்டாவது கொலை.
இலங்கையில் கற்பழிப்பிற்கு வழங்கப்படும் அதியுச்ச தண்டனையாக 20 வருடத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனை. இங்கு இவர்களுக்கு அதியுச்ச தண்டனையாக 20 வருட சிறை உறுதியாக அமைந்தாலும் கொலை என்கின்ற குற்றத்திலேயே இவர்களுக்கான தண்டனை அதிகரிக்க இருக்கிறது.
அது மரண தண்டனையாக வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கிறது காரணம் இலங்கையில் இடம்பெற்ற இவ்வாறானதோர் கூட்டுபாலியல் வன்புணர்விற்கு பொது எண்ண அடிப்படையில் இலங்கை சட்டத்தில் மரணதண்டனை வழங்கப்பட்டமையினையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளியான உதயனுக்கு 290 ஆண்டுகளும் சந்திரா ரகுபதிக்கு 300 ஆண்டு சிறை தண்டனை வழங்கியமையினையும் இங்கு ஞாபகம் செய்கின்றேன்.
கண்ணால் கண்டுகொண்ட சாட்சியக்காரர்களோ அன்றேல் பாதிக்கப்பட்டவரது வாக்குமூலங்களோ வித்தியா கொலையில் இல்லை எனவே வித்தியா கொலையில் சாட்சியங்களென சூழ்நிலை சாட்சியங்களுடாகவே விசாரணையை கொண்டு செல்லவேண்டிய தேவைக்கு நிர்பந்திக்கப்படுகிறது.
இது நேரடி சாட்சியங்களை விட கடினமானதோர் விடயமென்பது உங்களுக்கும் விளங்கும்.
சந்தேக நபர்களாக கைதுசெய்யப்பட்ட ஒன்பது நபர்களிடமும் விசாரணைகளை முன்னெடுப்பதென்பதும் , சூழ்நிலை சாட்சியங்களை கொண்டு நிருபிக்க வேண்டிய நிலையிலும் காலம் என்பது அவசியமானது.
இலங்கை சட்டங்களின் பிரகாரம் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு 24 மணித்தியாலத்தில் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படல் வேண்டும்.
அந்த 24 மணித்தியாலமானது சூழ்நிலைக்கு ஏற்ப 24,48 ,72 மணித்தியாலங்கள் வரையே நீடிக்கலாம் எனினும் நீதவான் நீதிமன்று 14 நாட்கள் மாத்திரமே தடுத்துவைக்க உத்தரவும் அதனை மீண்டும் மீண்டும் 14 நாட்களுக்கு நீடிக்கலாம் ஆனால் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி பிணை கோரவும் நீதிபதி பிணை வழங்கவும் சட்டத்தில் இடமுண்டு.
அவ்வாறாயின் சாதாரண சட்டத்தில் வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களை தடுத்து வைக்க முடியுமா?
சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கினால் என்ன நடக்கும்? அவ்வாறாயின் இந்த சந்தேக நபர்கள் எவ்வாறு ஆறுமாதகாலம் பிணையின்றி தடுத்து வைக்கப்பட்டனர்?
இங்குதான் வித்தியா கொலையின் சந்தேகநபர்களின் தடுப்பிற்காக பயங்கரவாத தடுப்புச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.
வித்தியா கொலை வழக்கில் சந்தேகநபர்கள் பயங்கரவாத தடுப்புசட்டத்தில் உள்வாங்கப்பட்டமைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றமை உண்மை. இந்த சட்டத்தில் பல சரத்துக்கள் உள்ளடங்கி இருந்தாலும் விசாரணைகளிற்கான கால நீடிப்பிற்காகவே இச் சட்டமானது பிரயோகிக்கப்பட்டது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் இங்கிருந்து குற்றப்பத்திரமானது தயாரிக்கப்படும். குற்றத்தை நிரூபிக்கும் சான்றுகள் மற்றும் இடம்பெற்ற குற்றத்தின் வகைகள் மற்றும் தண்டனை வகைகள் என்பன இங்கு விசேட குற்றப்புலனாய்வு பிரிவினரால் தயாரிக்கப்பட்டு நீதவான் நீதிமன்றிற்கு சமர்பிக்கப்படும்.
பல உண்மைகள் அப்போதுதான் மன்றில் சமர்பிக்கப்படும் இந்த இடத்தில் பயங்கரவாத தடுப்புச்சட்டமும் இவ் வழக்கில் வலுவற்றுபோகும் என்பதுடன் தண்டனைகளானது சாதாரண சட்டத்தின் பிரகாரமே பிரயோகிக்கப்படவிருக்கின்றது.
வித்தியா கொலை வழக்கில் இதுவரையில் குற்றப்பத்திரம் நீதிமன்றில் சமர்பிக்கப்படாது குற்றப்புலனாய்வு பிரிவினரால் கால நீதிடிப்பு மன்றில் கோரப்பட்டு குற்றப்புலனாய்வு துறையினரின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் பிரகாரம் விசாரணைகளுக்கான காலம் நீடிப்பானது சாதகமாகவா அன்றேல் பாதகமாக அமையுமா என்பதுடன் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்னத்திலிருந்து மேலதிக விசாரணைகளுக்காக இந்த வழக்கானது நாட்டின் எந்தவொரு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட இருக்கிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.
01. வித்தியாவிற்கும் விஜயகலா , துவாரகேஸ்வரன் மற்றும் வி.ரி தமிழ்மாறன் போன்றோருக்கான தொடர்பு என்ன?
02. சிரேஸ்ட சட்டத்தரணி தவராஜா வழக்கு விசாரணைகளிலிருந்து திடீரென விலகியமைக்கு காரணங்கள் என்ன?
தொடரும்..
~நெடும்புலையன்~