என்னை காப்பாற்றுங்கள். மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். என்னால் மூச்சு விட முடியவில்லை” 60 வயதான ஸ்ரீனிவாச பாபுவின் கடைசி வார்த்தைகள் இவை.

உடல்நல குறைவால் சாலையோரம் விழுந்திருந்த ஸ்ரீனிவாஸ் உதவி கேட்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

மூச்சு விடமுடியாமல் சிரமப்படும் ஸ்ரீனிவாசிடம், பெண் ஒருவர் பல கேள்விகளை கேட்கிறார். தெலங்கானாவின் மேடாக் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

”ஸ்ரீனிவாஸ் உடல்நல பாதிப்பில் சாலையில் மயங்கி விழுந்தவாறு அருகில் உள்ள நபர்களிடம் உதவி கேட்டார். உடனே அம்புலான்சை அழைத்தோம்.

ஆனால் ஒரு மணிநேரத்திற்கு பிறகே ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள் தங்களிடம் பிபிஇ கிட்டுகள் எனப்படும் பாதுகாப்பு கவசம் இல்லை என்றும் இந்த நோயாளிக்கு கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் இருப்பதால் வேறு ஆம்புலன்ஸை அழையுங்கள் எனவும் கூறி சென்றனர்.

மற்றொரு ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஸ்ரீனிவாஸ் உயிரிழந்துவிட்டார்” என அப்பகுதியில் உள்ள மக்கள் சம்பவம் நடத்த இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ”முதலில் வந்த ஆம்புலன்சில் ஊழியர்களுக்கு தேவையான இரண்டு பிபிஇ கிட்டுகள் இருந்தன.

ஆனால் நோயாளிக்கான பிபிஇ கிட்டு இல்லை. எனவே கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சம் காரணமாக நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மறுத்துள்ளனர்” என்பது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து மேடாக் மருத்துவ அதிகாரியான மருத்துவர் வெங்கடேஷ்வர ராவிடம் பிபிசி தெலுங்கு சேவை பேசியது.


அவர் அளித்த தகவலின்படி, ”ஸ்ரீனிவாஸ் ஹைத்திராபாத்திற்கு மாநகர பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவ்வாறான அசாதாரண சூழலில் பேருந்தையே மருத்துவமனைக்கு திருப்பும்படி ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.

எனவே செகுண்டா எனும் பகுதியில் உள்ள சுகாதார மையத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு ஸ்ரீனிவாஸ் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டுள்ளார்.

அதன் பிறகு தான் ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டுள்ளது, ஆனால் பலனில்லை” என மருத்துவர் வெங்கடேஸ்வரராவ் கூறுகிறார்.

ஜிவிகே இ.எம்.ஆர். ஐ என்ற நிறுவனத்துடனான கூட்டணியில் தெலங்கானா மாநிலத்தில் 108ஆம்புலன்ஸ் சேவைகள் இயங்குகின்றன.

மேடாக் மாவட்டத்தில் மட்டும் எட்டு ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் கோவிட் 19 நோயாளிகளுக்காக பயன்படுத்தபடுகிறது. மற்ற ஆறு ஆம்புலன்ஸ்களும் அவசர சிகிச்சைக்காக எப்போதும்போல பயன்பாட்டில் உள்ளன.

எனவே ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் பிபிஇ கிட்டுகள் வழங்குவது ஜிவிகே இ.எம்.ஆர். ஐ நிறுவனத்தின் பொறுப்பு. இருப்பினும் நாங்கள் 100 பிபிஇ கிட்டுகளை வழங்கியுள்ளோம் என மருத்துவர் வெங்கடேஷ்வர ராவ் கூறுகிறார்.

”மேலும் ஆம்புலன்ஸ் நோயாளியிடம் விரைந்து சென்று முதலுதவி அளித்து காலதாமதமின்றி நோயாளியை மருத்துவமனை அழைத்து செல்வதே ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கடமை.

ஆனால் இவர்கள் அதை செய்யவில்லை. ஏன் ஆம்புலன்சில் பிபிஇ இல்லை என்பது குறித்தும் எனக்கு தெரியவில்லை.

எனவே ஆம்புலன்சில் இருந்த ஓட்டுநர் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என நான் பரிந்துரைத்துள்ளேன்” என்கிறார் மருத்துவர் வெங்கடேஷ்வரராவ்.

Share.
Leave A Reply

Exit mobile version