தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் அதே கட்சியின் இன்னொரு வேட்பாளரான சசிகலா ரவிராஜுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை விருப்பு வாக்குகளை ‘களவாடியதன்’ மூலம் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்றாரா?’. இந்தக் கேள்விக்கான ஒரு சொல் பதில் இல்லை என்பதேயாகும்.

இருந்தாலும், கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தையும் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் 2020 பாராளுமன்றத் தேர்தல் சசிகலாவின் விருப்பு வாக்குகளை தனக்கு அனுகூலமான முறையில் சுமந்திரன் ‘மாற்றியிருந்தார’ என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிறைந்ததாக இருந்தன.

 

மேலும், மாவட்டம் ஒன்றின் பிரதான வாக்கு எண்ணும் நிலையத்தை ஆக்கிரமித்து வாக்குப் பெட்டிகளை அபகரிக்க முயன்ற ஒரு கும்பலை விரட்டியடிப்பதற்கு விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்தப்பட்ட இலங்கை தேர்தல் வரலாற்றின் முதல் சம்பவமாகவும் அது அமைந்தது.

சுமந்திரனை தவறான முறையில் குற்றம்சாட்டி மலினப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பிரசாரங்கள் சுயநல அரசியல் சக்திகளினால் யாழ்ப்பாண தேர்தல் சம்பவங்கள் தவறான வகையிலும் அவதூறான வகையிலும் ஊதி பெருப்பிக்கப்பட்டு இன்னமும் திரிபுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய ஒரு பின்புலத்திலேயே இந்தக் கட்டுரை யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் அமைந்திருந்த வாக்கெண்ணும் நிலையத்தில் உண்மையில் நடந்தது என்ன? அல்லது நடவாதது என்ன? என்பதை வாசகர்களுக்கு தெளிவுபடுத்தும் ஒரு முயற்சியாக வடக்கு தேர்தல் சர்ச்சை குறித்து கவனம் செலுத்துகின்றது.

பண்பு விழுமியங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்ற, (Post Truth) மாற்று உண்மைகள் (Alternative Facts) என்ற பதங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்ற ஒரு காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்.

சுமந்திரனின் விடயத்திலும் கூட ‘வாக்கு திருட்டு சதி’ என்ற நகைப்புக்கிடமான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இந்தக் கட்டுரை வாசகர்களுக்கு சான்றுகளை முன்வைக்க முயற்சிக்கும். எது உண்மை என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் எவ்வாறு அவரது சொந்த கட்சிக்குள் இருக்கும் பல்வேறு நபர்களினாலும் வெளியிலுள்ளவர்களினாலும் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார் என்பது பற்றி முன்னைய சந்தர்ப்பங்களில் நான் எழுதியிருக்கிறேன்.

தனித்தனியாக செயற்படுகின்ற வெவ்வேறு வகையான இந்த சக்திகள் சுமந்திரனை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் ஐக்கியப்பட்டு செயற்பட்டன. இருந்தாலும், சுமந்திரன் வெற்றிப் பெற்றார்.

சுமந்திரனும் அவரது சகா சிவஞானம் சிறிதரனும் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் வெற்றிப்பெறப் போகிறார்கள் என்பதை சுமந்திரனின் எதிரிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் புரிந்து கொண்டார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரனை பாதுகாத்து அவரை எதிர்ப்பவர்களை கண்டனம் செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனேயாவார்.

அந்த ‘குற்றத்தை’ செய்ததற்காக சிறிதரனும் கூட சுமந்திரனுடன் சேர்ந்து கூட்டமைப்பின் இன்னொரு முன்னாள் எம்.பி.யான சரவணபவனுக்கு சொந்தமான பத்திரிகைகளினால் தாக்கப்பட்டார்.

சுமந்திரனும் சிறிதரனும் சரவணபவனும் கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள்.

சிறிதரனும் சுமந்திரனும் முறையிட்டபோது தமிழரசுக் கட்சியின் தலைவரான சோமசுந்தரம் மாவை சேனாதிராஜா, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாவை சேனாதிராஜாவும் கூட யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டார். அவரை சரவணபவனின் பத்திரிகைகள் ஆதரித்தன.

மறுபுறத்தில் சுமந்திரனும் சிறிதரனும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கூட்டாகவே தங்களது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தார்கள்.

விருப்பு வாக்குகளுக்கான கூட்டமைப்பின் உட்கட்சி போட்டாபோட்டி பிரதானமாக இரு இரட்டையர்களுக்கிடையிலானதாக – அதாவது சுமந்திரன் – சிறிதரன் எதிர் சேனாதிராஜா – சரவணபவன் – இருந்தது.

சுமந்திரன் சிறிதரன் இரட்டையர்கள்

சுமந்திரன் – சிறிதரன் இரட்டையர்கள் தேர்தலில் வெற்றிப்பெறப் போகிறார்கள் என்று தெளிவாக தெரிய வந்ததும் இருவருக்கும் வாக்களிக்கக்கூடாது என்று மக்களை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள் பெருமளவில் அச்சிடப்பட்டு தேர்தல் தினத்துக்கு முதல்நாள் இரவும்பகலும் பரவலாக விநியோகிக்கப்பட்டன.

இது சிறிதரனும் சுமந்திரனும் தோற்க வேண்டும் என்று விரும்பிய கூட்டமைப்புக்குள் இருந்தவர்களினால் முன்னெடுக்கப்பட்ட விரக்தியின் விளிம்பிலான நடவடிக்கையாகும்.

அந்த பிரசுரங்கள் அச்சிடப்பட்ட அச்சகம் எது என்பதும் அதை விநியோகித்தவர்கள் யார் என்பதும் யாழ்ப்பாணத்தில் எல்லோருக்கும் தெரிந்த இரகசியம்.

இந்த முயற்சிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான ஏழு ஆசனங்களில் மூன்று அல்லது நான்கு ஆசனங்களை மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறும் என்பது ஆகஸ்ட் 5 வாக்களிப்பின் போக்குகள் உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளிக்காட்டின.

வெற்றிப்பெறக் கூடியவர்கள் சிறிதரன், சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் அல்லது சசிகலா ரவிராஜ் என்பதும் புரிய வந்தது. சரவணபவனும் சேனாதிராஜாவும் பற்றி அது விடயத்தில் பேசப்படவில்லை.

சுமந்திரனின் வெற்றி நெருங்கிவந்த நிலையில், அதை ‘சட்டவிரோதமானதாக்குவதற்கு’ மேலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

பெருமளவு வளங்களை கொண்ட கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் பிரசாரத்துக்கென 10 – 15 பேர் அடங்கிய ஒரு குழுவை முன்னதாக நியமித்திருந்தார்.

அவர்களது கடமை, சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு ஆதரவாக தொலைபேசி மூலம் செய்திகளை அனுப்புவதும் இணையத்தில் வெளியிடுவதுமேயாகும்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேரத்தில் அந்த குழுவுக்கு கொடுக்கப்பட்ட பணி சேனாதிராஜா, சரவணபவன், சிறிதரன், சித்தார்த்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பு வாக்குகளில் முன்னிலையில் இருக்கிறார்கள் என்றும் சித்தார்த்தனை முந்துவதற்கு சுமந்திரன் வாக்குகளை திருடிவிட்டார் என்றும் தகவல்களை பரப்புவதேயாகும்.

இந்த தவறான தகவல்கள் மிகவும் ஒருங்கிணைந்த முறையில் பரவலாக பரப்பப்பட்டன. வதந்திகள் அதிவேகமாக பரவ ஆரம்பித்தன.

சித்தார்த்தனிடமிருந்து சுமந்திரன் வாக்குகளை திருடி வி. தர்மலிங்கத்தின் மகனுக்கு தோல்வியை கொண்டு வந்துவிட்டார் என்ற கதை எங்கும்; பரவலாகியது.

சித்தார்த்தன் புளொட்டின் தலைவராக இருக்கின்ற போதிலும், அவரது தந்தையார் காலஞ்சென்ற தர்மலிங்கம் தமிழரசுக் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். 1960 தொடக்கம் 1983 வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

எம்.கே.சிவாஜிலிங்கம், 2020 பாராளுமன்றத் தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.

‘ஐயோ எங்கட தர்மலிங்கம் அண்ணரின்ட மகன் சித்தார்த்தனை சுமந்திரன் கள்ள வாக்கெடுத்து தோற்கடிச்சிட்டான்’ என்று சிவாஜிலிங்கம் பகிரங்கமாகவே கூச்சலிட்டு மாரடிக்க தொடங்கினார்.

அவரது ஒப்பாரி பாசாங்கு தனமானதும் விசித்திரமானதுமாகும். தர்மலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் 1985 செப்டெம்பர் 2ஆம் திகதி தமிழீழ விடுதலை இயக்கத்தினரால் (ரெலோ) கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் சிவாஜிலிங்கம் ரெலோவின் ஒரு சிரேஷ்ட தலைவராக இருந்தார்.

சிவாஜிலிங்கத்தின் ஒப்பாரி

சுமந்திரனின் தந்திரத்தின் மூலமாக தான் தோற்கடிக்கப்பட்டதாக பரவிய வதந்தி, சித்தார்த்தன் உடனடியாகவே தனது ஆதரவாளர்களுடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு விரைந்தோடி வருமளவுக்கு அவரை பாதித்தது.

ஐந்தாவது இடத்திலிருந்த சுமந்திரன் தன்னை பதிலீடு செய்துவிட்டதாக கேள்விப்பட்டதாக அவர் அங்கிருந்த ஆட்களுக்கு கூறினார்.

பிரதம தெரிவத்தாட்சி அலுவலர் மகேசனுடன் பேசுவதற்காக சித்தார்த்தன் வாக்கெண்ணும் நிலையத்துக்குள் சென்றார்.

இந்த வேளையில் தர்மலிங்கத்தின் மகனிடமிருந்து வெற்றியை சுமந்திரன் அபகரித்துவிட்டார் என்று சிவாஜிலிங்கத்தின் ஒப்பாரி தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், யாருமே அவரது ரெலோ ஏன் தர்மலிங்கத்தின் உயிரை பறித்தது என்று சிவாஜிலிங்கத்தை கேட்கவில்லை.

பிரதம தெரிவத்தாட்சி அலுவலருடன் மறுவாக்கு எண்ணிக்கை பற்றி சித்தார்த்தன் பேசியபோது, அவர் அளித்த பதில் புளொட் தலைவருக்கு திருப்தியை கொடுத்திருப்பது போன்று தோன்றியது. உடனடியாக அவர் அந்த இடத்திலிருந்து சந்தோஷமாக வெளியேறிவிட்டார்.


திருமதி சசிகலா ரவிராஜ்

அதற்கு பிறகு 2008ஆம் ஆண்டில் கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜின் மனைவி திருமதி சசிகலா ரவிராஜ் இலக்காக மாறினார்.

தனது கணவரினால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆதரவு தளத்தைக் கொண்ட சாவகச்சேரி தேர்தல் தொகுதியிலிருந்து கிடைக்கப்பெறும் வாக்குகளிலேயே சசிகலா பிரதானமாக தங்கியிருந்தார்.

சசிகலாவின் தேர்தல் பிரசாரங்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனினாலேயே கணிசமானளவு கையாளப்பட்டு வந்தது.

 

அவர் சுமந்திரனுக்கு மிகவும் நெருக்கமான சட்டத்தரணியாவார். சயந்தன் மூன்று பேருக்காக (சசிகலா ரவிராஜ், சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா) பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார்.

சாவகச்சேரியிலிருந்து கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை சசிகலாவை விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் மத்தியில் முன்கூட்டியே முன்னுக்கு தள்ளியது.

ஒரு கட்டத்தில் அவர் முன்னிலையிலிருந்த மூன்று வேட்பாளர்களில் ஒருவராக இருந்தார். பல்கலைக்கழக பட்டதாரியான சசிகலா கொழும்பின் முன்னணி மகளிர் கல்லூரியொன்றில் ஆசிரியராக பணியாற்றியவர்.

இத்தகைய பின்புலம் இருந்தபோதிலும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைமுறையுடன் பரிச்சயம் இல்லாதவராகவே அவர் இருந்தார்.

அதனால் முதல் மூன்று பேருக்குள் அவர் இருப்பதாக கூறி உத்தியோகப்பூர்வமற்ற முறையில் சிலர் அவரை பாராட்டியபோது தனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக அவர் தவறாக எண்ணினார். ஆனால், உண்மை நிலை அதுவல்ல.

ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் வெவ்வேறு இடங்களில் வாக்குசீட்டுகள் எண்ணப்பட்டு உறுதிப்படுத்தப்படுவது தெரிந்ததே.

அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டு வெவ்வேறு வாக்களிப்பு பிரிவுகளிலும் சகல கட்சிகளையும் சேர்ந்த வாக்காளர்களின் முகவர்களினால் இணக்கம் தெரிவிக்கப்பட்ட பின்னரே இந்த முடிவுகள் இறுதி செய்யப்படும்.

பிறகு வாக்குப்பெட்டிகள் தேர்தல் மாவட்டத்தின் பிரதான வாக்கெண்ணும் நிலையத்துக்கு கொண்டுவரப்படுகின்றன.

அந்த நேரத்தில் மாவட்ட மட்டத்தில் எண்ணிக்கை விபரங்கள் பட்டியலிடப்படுகின்றன. கிடைக்கின்ற எண்ணிக்கை விபரங்கள் மீள பரிசீலிக்கப்படுவது மாத்திரமே இங்கு நடைபெறும்.

ஒவ்வொரு வேட்பாளரும் பெறுகின்ற விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலிருந்தும் வருகின்ற விபரங்களை கணக்கிலெடுக்கும்போது கூடி குறையும்.

வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளின் நிரல் ஒழுங்கு எவர் எந்த தேர்தல் பிரிவிலிருந்து கூடுதலான ஆதரவை பெறுகிறார் என்பதை பொறுத்து மாற்றமடையும்.

யார்யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்ற விபரம் கடுமையாக மாற்றமடையலாம். பிரதம தெரிவத்தாட்சி அலுவலரினால் இறுதியாக அறிவிக்கப்படுகின்ற முடிவு மாத்திரமே உத்தியோகபூர்வமானது.

சசிகலா ரவிராஜ்

துரதிர்ஷ்டவசமாக திருமதி சசிகலா ரவிராஜ் விடயத்தில் நடந்தது என்னவென்றாலும், விருப்பு வாக்குகளில் தான் முன்னிலையில் நிற்பதாக கிடைத்த உத்தியோகபூர்வமற்ற தகவல் பெரும்பாலும் இறுதியானதாக இருக்கும் என்று அவர் நினைத்ததேயாகும்.

தான் வெற்றிப் பெற்றுவிட்டதாகவே அவர் மனதில் நினைத்துக் கொண்டிருந்தார். மேலும், வாக்கு எண்ணிக்கை விபரங்கள் வரும்போது நிலைமை மாறலாம் என்று அவர் சிந்திக்கவில்லை.

சித்தார்த்தனை சுமந்திரன் பதிலீடு செய்துவிட்டார் என்ற தவறான தகவலை பரப்பிய அதே பிரகிருதிகள் இப்போது சசிகலா ஏமாற்றப்பட்டுவிட்டார் என்றும் அவர் தனது ஆசனத்தை துறப்பதற்கு சுமந்திரன் நிர்ப்பந்தித்து விட்டார் என்றும் புதிய வதந்திகளை பரப்பினார்கள்.

முடிவுகள் அறிவிக்கப்படவுமில்லை. வெற்றியாளர் என்று யாரும் பிரகடனப்படுத்தப்படவுமில்லை. ஆனால், வதந்திகள் வேகமாக பரவிக் கொண்டிருந்தன.

ஒரு கட்டத்தில் சசிகலாவின் பிரதம வாக்கு எண்ணிக்கை முகவர் சயந்தனுக்கு சுமந்திரன் சசிகலாவை இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்துவிட்டார் என்ற தகவல் தொலைபேசி அழைப்பொன்றின்மூலம் வந்தது.

அந்த நேரத்தில் சயந்தன் சசிகலாவுக்கு அருகாமையில்தான் அமர்ந்திருந்தார் ‘அவரிடமே கேளுங்கள்’ என்று அந்த தொலைபேசியை சசிகலாவுக்கு சயந்தன் கொடுத்தார்.

சசிகலா அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்றும் அது வதந்தி என்றும் நிராகரித்தார். அதனால் சற்று குழப்பமடைந்த சசிகலா மற்றவர்களுடன் தொலைபேசியில் பேச ஆரம்பித்தார்.

இந்த தொலைபேசி கலந்துரையாடல்கள் அவரின் வெற்றிநிலை பற்றி ஒரு சஞ்சலமான நிலைமையை ஏற்படுத்தியது.

அவர் அடிக்கடி பிரதம தெரிவத்தாட்சி அலுவலரிடம் சென்று இறுதி முடிவுகளை அறிவிப்பதற்கு ஏன் காலதாமதமாகிறது என்று கேட்கத் தொடங்கினார்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் நகர்ந்து கொண்டிருக்கையில்,‘களவெடுத்த வாக்குகள்’ மூலமாக சசிகலாவை சுமந்திரன் பதிலீடு செய்துவிட்டார் என்ற கதை பரவத் தொடங்கியது.

அதேவேளை, சுமந்திரன் தனது யாழ்ப்பாண வீட்டில் இருந்த வண்ணம் தனது முகவருடன் கிரமமாக தொடர்பு கொண்டு தனது நிலையை அறிந்த வண்ணம் இருந்தார்.

எல்லா தேர்தல் தொகுதிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மத்தியில் சுமந்திரன் ஒன்றில் முதலாவது அல்லது இரண்டாவது இடத்தில் வந்து கொண்டிருந்தார். அதனால் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது.

ஒரு கட்டத்தில் சுமந்திரனின் உடுப்பிட்டி முகவர் லவண் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பெரும்பாலும் வாக்கெண்ணும் நடவடிக்கை முடிந்து கொண்டிருக்கிறது, விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

பிறகு சுமந்திரன் உத்தியோகப்பூர்வ முடிவுகளை கேட்பதற்காக சயந்தனுடன் பிரதான வாக்கெண்ணும் நிலையத்துக்கு சென்றார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அவர் வந்து சேர்ந்தபோது வெளியே கூடியிருந்த கும்பல் கூச்சலிட்டது.

கள்ளன் கள்ளன்’ என்று அவர்கள் அடிக்கடி சத்தமிட்டார்கள். சுமந்திரன் வாக்குகளை களவெடுத்ததன் மூலம் வெற்றிப் பெறுகிறார் என்ற கதை பரவலாக பரவி விட்டது. அது யூடியூப், தொலைபேசி செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் உலகம் பூராகவும் பரவியது.

வெளிநாட்டிலுள்ள புலிகள் ஆதரவு சக்திகளினால் சுமந்திரனை கொலை செய்வதற்கு தீட்டப்பட்ட மூன்று சதி முயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

சுமந்திரன் தனக்கு பாதுகாப்பை கோரியிருக்கவில்லை என்றபோதிலும், புலனாய்வுத் தகவல்களின் நம்பகத்தன்மை காரணமாக கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் அவரின் பாதுகாப்புக்கு விசேட அதிரடிப் படையை வழங்கின.

வடக்கில் இயக்கச்சியில் குண்டு தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக முன்னாள் இயக்கப் போராளி மரணமடைந்ததையடுத்து, அரச புலனாய்வு சேவையின் சிபாரிசின் பெயரில் சுமந்திரனுக்கு பாதுகாப்பு அளிக்கும் விசேட அதிரடிப்படையினரின் எண்ணிக்கை அண்மையில் அதிகரிக்கப்பட்டது.

சுமந்திரன் கலந்துகொண்டு பேசிய தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர் மீது எறிந்து கொலை செய்வதற்காகவே அந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

விசேட அதிரடிப்படை

அதிரடிப்படை வீரர்களில் சிலர் தங்களது வாகனங்களில் ஆயுதங்களை வைத்துவிட்டே நிராயுதபாணிகளாக யாழ்ப்பாண மத்திய கல்லூரி வளாகத்துக்குள் சுமந்திரனுடன் கூடச் சென்றனர்.

விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இல்லாதிருந்தால் சுமந்திரன் கும்பல்களினால் தாக்கப்பட்டிருப்பது மிகவும் சாத்தியம். சுமந்திரனும் சயந்தனும் உள்ளே சென்று பிரதம தெரிவத்தாட்சி அலுவலர் இருந்த இடத்துக்கு அப்பால் முடிவுகள் அறிவிக்கப்படும் பகுதியில் இருந்தனர்.

எந்தக் கட்டத்திலும் சுமந்திரன் மகேசனுடன் பேசவோ அல்லது வாக்கு எண்ணப்படும் பகுதிக்குள் பிரவேசிக்கவோ இல்லை. ஒரு கட்டத்தில் திருமதி சசிகலா ரவிராஜ் பிரதம தெரிவத்தாட்சி அலுவலருடன் பேசினார். முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்று அலுவலரிடம் அவர் கேட்கிறார் என்றே கருதப்பட்டது. பிறகு அவர் மீண்டும் வெளியே சென்றார்.

அதேவேளை, வெளியிலிருந்த கூட்டம் கிளர்ந்தெழுந்து சுமந்திரனுக்கு எதிராக சுலோகங்களை கிளப்பி அவரை ஒரு ‘வாக்கு கள்ளன்’ என்று சத்தம் போட்டது. சில நபர்கள் அப்போது வெளியில் நின்ற முன்னாள் வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தையும் சிறிதரனையும் தரக்குறைவாக ஏசத் தொடங்கினர்.

படிப்படியாக கூச்சல் மேலும் அதிகரிக்கவே கூடி நின்ற கும்பல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மத்திய கல்லூரி வளாகத்துக்குள் உணவுத் துண்டுகள், தண்ணீர் போத்தல்கள் மட்டுமல்ல சில கற்களும் கூட வீசப்பட்டன.

சுமந்திரன் தனக்கு அனுகூலமான முறையில் விருப்பு வாக்குகளை மாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார் என்ற கதை மிகவேகமாக பரவியது.

கும்பல்கள் அப்போது வாக்கு எண்ணிக்கை நிலைய வளாகத்துக்குள் பிரவேசிக்க முயற்சித்தது. சுமந்திரனால் செய்யப்படுவதாக கூறப்பட்ட மோசடியை தடுப்பதே அந்த கும்பலின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். அது ஒரு பாரதூரமான நிலைவரமாக இருந்தது.

கும்பல்கள் வாக்களிப்பு நிலையத்துக்குள் அத்துமீறி பிரவேசித்து வாக்குப் பெட்டிகளை அபகரித்திருந்தால் முழு யாழ்ப்பாண மாவட்டத்தினதும் தேர்தல் ஆபத்துக்குள்ளாகியிருக்கும். தவிரவும், அவசியமானால் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், யாழ்ப்பாண மத்திய கல்லூரிக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அத்தகைய தீவிர நடவடிக்கையில் இறங்கவில்லை.

அத்தகைய அவசரகால நிலைமைகளை சமாளிக்க நின்று கொண்டிருந்த பொலிஸ் கலகம் அடக்கும் படையினரையும் அதிரடிப்படையினரையும் அவர் அழைத்தார்.

சுமந்திரன் பாதுகாப்புக்கு பொறுப்பான விசேட அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கையில் சம்பந்தப்படவில்லை.

அவர்களினால் மிகவும் சுலபமாகவும் விரைவாகவும் குழப்பநிலையை அடக்கி கும்பல்களை கலைக்கக்கூடியதாக இருந்தது.

‘இறப்பர் துப்பாக்கி ரவைகளையோ கண்ணீர் புகை குண்டையோ பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கவில்லை.

கும்பல்கள் அரக்கபறக்க ஓடி ஒரு கணத்தில் கலைந்து விட்டனர்’ என்று சம்பவ இடத்தில் நின்று நிலைமைகளை நேரடியாக அவதானித்துக்கொண்டிருந்த ஒருவர் என்னிடம் கூறினார்.

இந்தக் குழப்பநிலைகளை உருவாக்கிய கும்பல்களில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த பிரகிருதிகள் இருந்தார்கள் என்பதை தகவல் அறிந்த பாதுகாப்பு வட்டாரம் மூலம் தெரிந்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டது. ஏனையவர்கள் சிவாஜிலிங்கத்தின் ஆதரவாளர்களும் தமிழ் காங்கிரஸை ஆதரிப்பவர்களாகவும் இருந்தனர்.

கும்பல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர்களின் ஆதரவாளர்களும் இருந்ததாக அடையாளம் காணப்பட்டது மிகவும் விசித்திரமான ஒன்றாகும்.

அந்த கும்பலில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டது இன்னொரு முக்கியமான பேர்வழி ஊர்காவற்துறை தொகுதியை சேர்ந்த கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் என்றும் அவர் கட்சியுடன் தொடர்புடைய பிரபல தமிழ் வழக்கறிஞர் ஒருவரின் கையாள் என்றும் கூறப்பட்டது.

கும்பல் கலைந்துசென்ற பிறகு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் ஒருவர் தேர்தல் முடிவுகளின் உத்தியோகபூர்வ முடிவு மேலும் தாமதமாகும் என்று சுமந்திரனுக்கு அறிவித்தார்.

அதனால் சுமந்திரன் இன்னொரு வாயிலினூடாக வளாகத்தை விட்டு வெளியேறினார். அந்தப் பகுதியில் நின்ற சில நபர்கள் சுமந்திரனை கண்டதும் அவரை நோக்கி ஓடிச்சென்று ‘கள்ளன் கள்ளன்’ என்று மீண்டும் மீண்டும் சத்தம் போட்டனர்.

கடமையிலிருந்த பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அவர்களை விரட்டி கலைத்தனர். சுமந்திரன் வீட்டுக்கு கிளம்பி உத்தியோகபூர்வ முடிவுகளின் அறிவிப்புக்காக காத்திருந்தார்.

எழுவரில் மூவர்

முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏழு ஆசனங்களில் மூன்று ஆசனங்கள் வீட்டு சின்னத்தின் கீழ் தமிழரசுக் கட்சியாக போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறிதரன்(35,884), சுமந்திரன்(27,834) மற்றும் சித்தார்த்தன்(23,840) ஆகியோர் அவர்களின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் எம்.பி.க்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

சசிகலா ரவிராஜுக்கு
23,098 வாக்குகள் கிடைத்து அவர் நான்காவதாக வந்தபோதும் அவர் தெரிவு செய்யப்படவில்லை. சரவணபவனும்(20,392) சேனாதிராஜாவும் (20,358) ஐந்தாவதாகவும் ஆறாவதாகவும் வந்தனர்.

பின்னர் ஊடகங்களிடம் பேசிய சுமந்திரன் பருத்தித்துறை, உடுப்பிட்டி மற்றும் நல்லூர் தொகுதிகளில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மத்தியில் தான் முதலாவதாக வந்ததாகவும் ஏனைய தொகுதிகள் சகலதிலும் இரண்டாவதாக வந்ததாகவும் கூறினார்.

சிறிதரன் பெற்ற வாக்குகளில் சுமார் இருபதாயிரம் கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தை சேர்ந்ததாக இருந்த அதேவேளை, தனக்கு சுமார் 21,000 வாக்குகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் கிடைத்ததாகவும் சுமந்திரன் கூறுகிறார்.

இதுவே யாழ்ப்பாண மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்களினால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையான வாக்குகளாகும்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து போராடி சுமந்திரன் அவருக்கு தகுதியான வெற்றியை பெற்றபோதும், அந்த வெற்றியை மகிழ்ச்சியாக அனுபவிக்க அவரால் முடியவில்லை.

சசிகலா ரவிராஜ் தெரிவுசெய்யப்பட தவறிவிட்டார். அவர் எடுத்த விருப்பு வாக்குகள் மூன்றாவதாக வந்து எம்.பி.யாக தெரிவான சித்தார்த்தன் பெற்ற விருப்பு வாக்குகளையும் விட 742 வாக்குகள் குறைவானதாகும்.

வழமையாக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுக்கு உடனடியாகவே மேலே இருக்கின்ற வேட்பாளருக்கு எதிராகவே குற்றச்சாட்டுகளை சுமத்துவார்கள்.

ஆனால், இங்கு சசிகலா முறைப்பாடு செய்தாராக இருந்தால் சித்தார்த்தனுக்கு எதிராகத்தான் அதை செய்திருக்க வேண்டும்.

ஆனால், சசிகலாவும் அவரது மகளும் அவரை விட 4700 வாக்குகள் கூடுதலாகப் பெற்ற சுமந்திரனையே குற்றம் சாட்டத் தொடங்கினார்கள்.

வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட்டிருந்த அதிகாரியொருவர் தனது பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்ற நிபந்தனையுடன் உண்மையில் என்ன நடந்தது என்பதை பின்வருமாறு கூறினார்.

கிளிநொச்சி மற்றும் சாவகச்சேரி வாக்குகளில் பெருமளவானவை வெகு முன்னதாகவே வந்துவிட்டன.

இதனால் சிறிதரனும் சசிகலாவும் முன்கூட்டியே முன்னிலைக்கு வரக்கூடியதாக இருந்தது. கூட்டமைப்பின் சிறிதரன் முதலாவதாகவும் சசிகலா இரண்டாவதாகவும் 20,000 வாக்கு பெற்று முன்னிலையில் நின்றனர்.

ஆனால் மற்ற வாக்குகள் வந்துசேரத் தொடங்கியதும் சசிகலாவின் மொத்த வாக்குகள் குறையத் தொடங்கிய அதேவேளை, சுமந்திரன் சசிகலாவை முந்திச் சென்று சிறிதரனுக்கு அடுத்ததாக வந்தார்.

அப்போது சசிகலா மூன்றாவது இடத்திலேயே இருந்தார். மீண்டும் கோப்பாய் மற்றும் மானிப்பாய் வாக்குகள் வந்ததும் சித்தார்த்தனின் வாக்குகள் அதிகரிக்கத் தொடங்கி அவர் சுமார் 700 வாக்குகளினால் சசிகலாவை முந்தினார்.

சுமந்திரன் தனது வெற்றியை அபகரித்துவிட்டார் என்ற தொனியில் சசிகலா சில கருத்துகளை வெளியிட்டார்.

வெற்றிப் பெற்றதற்காக தான் வாழ்த்தப்பட்டதாகவும் ஆனால் சுமந்திரன் வாக்கெடுப்பு நிலைய வளாகத்துக்குள் பிரவேசித்த பொழுது தனது வெற்றிநிலையை தான் திடீரென இழந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

லண்டனில் படித்து சட்ட பட்டதாரியான சசிகலாவின் மகள் பிரவீனா சுமந்திரனுக்கு எதிராக வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டார்.

அவரின் குற்றச்சாட்டுகளில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை என்று நல்ல சிந்தனையுள்ள நபர்கள் சிலர் சுட்டிக்காட்டியபோது பிரவீனா அநாவசியமான முறையில் குற்றச்சாட்டுக்கு மேலாக குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போனார்.

சசிகலாவும் மகளும் அழுத காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. தவறான குற்றச்சாட்டுகள் உலகம் பூராகவும் விரிவாக பிரசாரப்படுத்தப்பட்டன.

அடுத்து விரைவாகவே இலங்கையிலும் வெளிநாடுகளிலும் சுமந்திரனுக்கு எதிராக பெரிய பிரசாரம் முடுக்கிவிடப்பட்டது.

சசிகலாவிடமிருந்து வாக்குகளை களவெடுத்து சுமந்திரன் வென்றுவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. காலஞ்சென்ற ரவிராஜின் நெருங்கிய உறவுக்காரி என்று கூறிக்கொண்ட ஒரு பெண்மணி, சாவகச்சேரியில் இருக்கும் அவரது சிலைக்கு முன்பாக சசிகலா எம்.பி.யாக தெரிவு செய்யப்படும் வரை தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

ரவிராஜின் சிலையின் முகத்தை அவர் கறுப்பு துணியால் மூடியும் இருந்தார். இன்னொரு வெட்கக்கேடான திருப்பமாக சிவாஜிலிங்கமும் அனந்தி சசிதரனும் அங்கஜன் ராமநாதனும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கவும் சுமந்திரனை கண்டிக்கவும் தொலைக்காட்சி கெமராவுடன் சசிகலா வீட்டுக்கு சென்றனர்.

சுமந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சசிகலாவை வலியுறுத்திய அவர்கள், தாங்கள் அதற்கான செலவுகளை பார்த்துக்கொள்வதாகவும் கூறினர். சசிகலா அது விடயத்தில் எதுவும் கூறாது இருந்துவிட்டார்.

முன்னைய நிலைப்பாட்டில் மாற்றம்

ஒருசில நாட்களுக்கு பிறகு தனது முன்னைய நிலைப்பாட்டை சசிகலா மாற்றிக்கொண்டார் போல தெரிகிறது. சுமந்திரனை தான் குற்றம் சாட்டவில்லை என்று கூறினார்.

விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தியதை மாத்திரமே தான் கண்டித்ததாகவும் அவர் கூறினார். சிறிதரன், சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோரை பாராட்டி சசிகலா தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றையும் செய்தார்.

சுமந்திரனுக்கு எதிரான பிரசாரத்தின் பிரதான ஊற்றுமூலமாக விளங்கிய பிரவீனாவின் முகநூல் பக்கம் திடீரென்று செயலிழந்தது. சுமந்திரன் மீது தவறான முறையில் தாங்கள் குற்றம் சாட்டியதை ரவிராஜ் குடும்பம் புரிந்து கொண்டது போல் தெரிகிறது.

இருந்தாலும் ஏற்படுத்தப்பட்ட சேதம் எளிதில் சீர்செய்யக் கூடியதல்ல. ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் மிகவும் அநீதியான முறையில் சுமந்திரன் தூற்றப்பட்டார்.

மீண்டும் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்ட சுமந்திரனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் வெற்றியின் பிரகாசத்தை இல்லாமல் செய்யவும் இந்த சம்பவத்தை சுமந்திரனுக்கு எதிரான சக்திகள் பயன்படுத்தியிருக்கின்றன.

வெற்றி பெறுவதிலிருந்து சுமந்திரனை தடுக்க தவறிய இந்த பரிதாபகரமான சக்திகள் அவரது நியாயபூர்வமான வெற்றியை சட்டப்பூர்வமற்றதாக்க கடுமையாக முயன்று கொண்டிருக்கின்றன.

ஆங்கில மூலம்: டெய்லி மிரர்

தமிழ் மொழிபெயர்ப்பு: வீ. தனபாலசிங்கம்

Share.
Leave A Reply

Exit mobile version