இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் தமிழினப்  படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது .

ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இன்று காலை 10 .30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் அனைத்து சுடர்களும் பொதுமக்களால் ஏற்றப்பட்டன. அதனை தொடர்ந்து மத தலைவர்கள் நினைவுத்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்த அதனை தொடர்ந்து பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பொது சுடரினை போரில் ஒரு கையை இழந்த பொதுமகன் ஏற்றிவைத்தார்.  அதனை தொடர்ந்து நினைவேந்தல் பிரகடனம் வாசிக்கப்பட்டது .

அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற வளாகத்தை சூழ பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததோடு இராணுவ புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அத்தோடு முள்ளிவாய்க்கால் கிராமம் ஆரம்பிக்கும் பகுதியிலிருந்து கிராமம் முடிவடையும் பகுதிவரையான 3.5 km பிரதான வீதியில் நான்கு இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததோடு அஞ்சலி நிகழ்வுக்கு வருகை தந்தவர்களது வாகன இலக்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நினைவேந்தல் வளாகத்தில் பல்வேறு தரப்பினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

(படங்கள் –  கே .குமணன்)

 

Share.
Leave A Reply

Exit mobile version