நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் (DLS) முறைமையில் பாகிஸ்தான் 21 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.
பக்கார் ஸமான் குவித்த அபார சதம், அணித் தலைவர் பாபர் அஸாம் பெற்ற அரைச் சதம் ஆகியனவும் அவர்கள் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 194 ஓட்டங்களும் பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்தன.
இப் போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்த போதிலும் டக்வேர்த் லூயிஸ் முறைமை அமுலுக்கு வந்ததால் அது பலனற்றுப் போனது.
நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 402 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது சீரற்ற காலநிலையால் இரண்டு தடவைகள் ஆட்டம் தடைப்பட்டதால் அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் வெற்றி இலக்கு திருத்தப்பட்டது.
பாகிஸ்தான் 21.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் பிற்பகல் 5.00 மணியளவில் தடைப்பட்டது.
அந்த சந்தர்ப்பத்தில் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் நியூஸிலாந்தைவிட 10 ஓட்டங்களால் பாகிஸ்தான் முன்னிலையில் இருந்தது.
மழை விட்ட பின்னர் மாலை 6.20 மணிக்கு ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது.
ஆனால், 25.3 ஓவர்களில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இரண்டாவது தடவையாக மாலை 6.40 மணியளவில் தடைப்பட்டது.
அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் பாகிஸ்தான் 21 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.
இந் நிலையில் ஆட்டம் வெட்டு நேரப்படி (கட் ஓவ் டைம்) 7.40 மணிக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட, டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் பாகிஸ்தான் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது அதன் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அப்துல்லா ஷபிக் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 6 ஓட்டங்களாக இருந்தது.
பக்கார் ஸமான் 81 பந்துகளில் 11 சிக்ஸ்கள், 8 பவுண்டறிகள் உட்பட 126 ஓட்டங்களுடனும் பாபர் அஸாம் 63 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட் 66 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 401 ஓட்டங்களைக் குவித்தது.
டெவன் கொன்வேயும் ரச்சின் ரவீந்த்ராவும் 55 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
கொன்வே 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து ரவீந்த்ராவும் அணித் தலைவர் கேன் வில்லியம்ஸனும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 141 பந்துகளில் 180 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தை நல்ல நிலையில் இட்டடனர்.
ஆனால், இருவரும் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற்று வந்த கேன் வில்லியம்ஸன் தனது மீள்வருகையில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 79 பந்துகளில் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 95 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
ரச்சின் ரவிந்த்ரா 94 பந்துகளில் 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 108 ஓட்டங்களைக் குவித்தார்.
இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் ரவீந்த்ரா குவித்த 3 சதம் இதுவாகும்.
மத்திய வரிசையில் க்ளென் பிலிப்ஸ் (48 ஓட்டங்கள்), மார்க் செப்மன் (39), டெரில் மிச்செல் (29), மிச்செல் சென்ட்னர் (26 ஆ.இ.) ஆகியோரும் நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு தங்களது அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
ஆனால் அவை அனைத்தும் சீரற்ற காலநிலையில் வீண்போயின.
பந்துவீச்சில் மொஹமத் வசிம் 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியை அடுத்து பாகிஸ்தான் 6 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.