ஹோலோகாஸ்ட்(இனப்படுகொலை) என்பது இரண்டாம் உலகப் போரின்போது (1939-1945), கோடிக்கணக்கான யூதர்கள் அவர்கள் யூதர்கள் என்பதற்காகவே கொல்லப்பட்ட வரலாற்றின் கொடூரமான சம்பவம்.
இந்தப் படுகொலைகள் ஜெர்மனியின் நாஜி கட்சியால் அடால்ஃப் ஹிட்லர் தலைமையில் நிகழ்த்தப்பட்டது. இதில் யூத மக்களே நாஜிக்களின் இலக்காக இருந்தனர். அவர்களே அதிக எண்ணிக்கையில் கொல்லவும் பட்டனர். கிட்டத்தட்ட ஐரோப்பாவை சேர்ந்த ஒவ்வொரு 10 யூதர்களில் 7 பேர் அவர்களின் இன அடையாளத்திற்காகவே என்பதற்காகவே கொல்லப்பட்டனர்.
அவர்களை மட்டுமின்றி ரோமா(ஜிப்ஸிக்கள்) மற்றும் மாற்றுத் திறனாளிகளையும் கொன்று குவித்தனர் நாஜிக்கள். மேலும் அவர்களது எதிர் குழுக்கள் மற்றும் பால் புதுமையினர் உள்ளிட்ட மக்களின் உரிமைகளையும்கூட அவர்கள் பறித்தனர். இவர்களில் பலர் சித்ரவதை செய்யப்பட்டு இறந்து போயினர்.
இந்த ஹோலோகாஸ்ட்தான் இனப்படுகொலைக்கு எடுத்துக்காட்டு. இனப்படுகொலை என்பது உள்நோக்கத்தோடு குறிப்பிட்ட நாடு, இனம் மற்றும் மதத்தைச் சார்ந்த மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிப்பதாகும்.
யார் இந்த நாஜிக்கள்?
நாஜி(Nazi) என்பது ஜெர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சி(NSDAP) என்பதன் சுருக்கம். இது 1919ஆம் ஆண்டில் முதல் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி.
முதல் உலகப்போரில் ஏற்பட்ட பின்னடைவால் ஜெர்மனி போராடிக் கொண்டிருந்த நேரத்தில் 1920 காலகட்டங்களில் இந்தக் கட்சி பிரபலமடைந்தது. அந்தப் போரில் ஜெர்மனி தோற்றதால், போரில் வெற்றி பெற்ற நாடுகளுக்குப் பெரும் தொகை கொடுக்க வேண்டியிருந்தது.
இந்நிலையில் மக்கள் பலரும் ஏழைகளாகவும், அந்த நேரத்தில் தேவையான அளவு வேலைவாய்ப்புகள் இல்லாமலும் இருந்தது. மேலும், ஜெர்மானியர்கள் நாஜிக்களை நோக்கி வந்ததற்கான காரணம் மாற்றம் குறித்து நாஜி கட்சி கொடுத்த நம்பிக்கை.
நாஜிக்கள் இனவெறியர்களாகவும், தங்களது இனம் என்று அழைக்கப்படும் ஆரிய இனத்தைத் தவிர வேறு எதுவும் மேலானது இல்லை என்று நம்புபவர்களாகவும் இருந்தனர். ஜெர்மானியர்களாக இருப்பவர்களே ஆரியர்கள் என்று கூறினர் நாஜிக்கள். மேலும் யூதர்கள், ரோமா (ஜிப்ஸிக்கள்), கறுப்பினத்தவர்கள் மற்றும் இதர இனங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஆரியர்களுக்குக் கீழானவர்கள் என்றும் நம்பினார்கள்.
ஜெர்மனி மற்ற நாடுகளைவிடச் சிறந்த நாடு என்றும், தங்கள் மக்களின் உயர்ந்த தன்மை மூலம் மற்றவர்களை ஆதிக்கம் செலுத்த முடியும், எனவே அவர்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் நம்பினர். இதுவே இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் பின்பும் பிற நாடுகளை ஜெர்மனி கைப்பற்ற வழிவகுத்தது.
யார் இந்த அடால்ஃப் ஹிட்லர்?
தனது கட்சி அதிகாரத்திற்கு வந்த தருணத்தில் இருந்து, ஜெர்மானியர்களின் வாழ்க்கையில் அனைத்து அம்சங்களிலும் நாஜி கொள்கைகளை புகுத்தத் தொடங்கினார் அடால்ஃப் ஹிட்லர். மேலும் பயம் மற்றும் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி அவர்களைத் தனது கட்டுக்குள் கொண்டு வந்தார்.
ஜெர்மனியின் அதிபர் ஹிண்டன்பர்க் 1934இல் இறந்தபோது, ஹிட்லர் தன்னைத் தானே தலைவர்(Fuhrer) அல்லது ‘ஜெர்மனியின் உச்சபட்ச தலைவர்’ (supreme leader of Germany) என்று அறிவித்துக்கொண்டார். (தற்போது, Fuhrer என்ற சொல்லுக்கு மக்கள் மீது மிருகத்தனமான ஆட்சியைத் திணிக்கும் இரக்கமற்ற தலைவர் என்ற எதிர்மறையான அர்த்தம் உள்ளது.)
ஹிட்லருக்கும் நாஜிகளுக்கும் முக்கியமான மூன்று விஷயங்கள்:
ஆரிய இனத்தின் புனிதம்
ஜெர்மனியின் மகத்துவம்
அடால்ஃப் ஹிட்லரை உச்சமாகக் கருதுவது
இவற்றை மக்களைப் பின்பற்றச் செய்ய நாஜி கட்சி பல்வேறு பிரசாரங்களைச் செய்தது. அதற்காகப் பெரும் பேரணிகள், பெரிய ஸ்பீக்கர்கள் அமைத்து பொதுக்கூட்டங்களில் நாஜிக்கள் குறித்த தகவல்களைப் பரப்புவது போன்ற பணிகளைச் செய்தனர்.
ஹோலோகாஸ்ட் என்றால் என்ன?
ஹோலோகாஸ்ட் என்பது யூத மக்களை ஒடுக்குவதில் தொடங்கி, இறுதியாக அவர்களின் இன அடையாளத்திற்காகவே மில்லியன் கணக்கான யூத மக்களை கொன்று குவித்ததில் முடிந்த துயர சம்பவம். இது காலப்போக்கில் கொடூரமானதாக மாறிய ஒரு செயல்பாடு.
நாஜிக்களின் கொடுமைகள்
நாஜிக்கள் 1933இல் அதிகாரத்திற்கு வந்தது முதல், “சமூகத்தில் வாழத் தகுதியான அங்கத்தினர்” என்று தாங்கள் நினைக்காத மக்களை, குறிப்பாக யூத மக்களைத் துன்புறுத்தினார்கள்.
அவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டும், அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்தினர். இதனால் யூதர்கள் சில இடங்களில் அனுமதிக்கப்படவில்லை மற்றும் சில வேலைகளைச் செய்யத் தடை விதிக்கப்பட்டது.
“அரசின் எதிரிகள்” என்று அவர்கள் நினைக்கும் மக்களை சிறையில் அடைத்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கக்கூடிய வதை முகாம்களையும் அமைக்கத் தொடங்கினர். இதில் யூத மக்களும் நாஜிக்களை ஆதரிக்காத பிற மக்களும் அடங்குவர்.
அதுபோன்ற டச்சாவ் என்று அழைக்கப்படும் முதல் முகாம் மார்ச் 1933இல் முனிச்சிற்கு வெளியே திறக்கப்பட்டது. 1933 மற்றும் 1945 ஆண்டுகளுக்கு இடையில், நாஜிக்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் 40,000க்கும் மேற்பட்ட முகாம்களை உருவாக்கினர்.
அதில் சில வேலை செய்வதற்கான முகாம்கள், சில கைதிகளை தற்காலிகமாக தங்க வைப்பதற்கான முகாம்கள், மற்றவை வதை முகாம்கள். அப்படி 1941இல் முதலில் வதை முகாம்கள் தொடங்கப்பட்டன. இங்குதான் நாஜிக்கள் அதிக எண்ணிக்கையில் மக்களைக் கொல்வார்கள்.
இங்கு எந்தக் காரணமும் இல்லாமல் பலர் முகாம் காவலர்களால் கொல்லப்பட்டனர். மேலும் பலர் அவர்களின் மோசமான நிலைமைகளின் காரணமாக இறந்தனர்.
நாஜிக்கள் அனைவரின் வாழ்க்கையையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் தொடங்கினார்கள். 1934ஆம் ஆண்டில், தீங்கிழைக்கும் வதந்திகள் சட்டம் என்று அழைக்கப்படும் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நாஜிக்களுக்கு எதிரான நகைச்சுவை சொல்வதை குற்றமாகக் கருதும் சட்டம்.
ஜாஸ் இசை தடை செய்யப்பட்டது, பாடப் புத்தகங்கள் நாஜிக் கருத்துகளை உள்ளடக்கியதாக மாற்றி எழுதப்பட்டன, ஹிட்லரின் படங்கள் எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டன, நாஜிக்களுக்கு பிடித்தது போல் எழுதப்படாத புத்தகங்கள் அழிக்கப்பட்டன.
கடந்த 1935இல், 1,600 செய்தித்தாள்கள் மூடப்பட்டன, மீதமுள்ள செய்தித்தாள்கள் நாஜிக்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்டுரைகளை மட்டுமே அச்சிட அனுமதிக்கப்பட்டன.
ஹிட்லர் யூத் (ஆண்கள்) மற்றும் பிடிஎம் (பெண்கள்) என்ற இளைஞர்களுக்கான கட்டாயக் குழுக்களை அமைத்தனர் நாஜிக்கள். இதன் மூலம் அவர்கள் வளரும்போது ஹிட்லரை வணங்கும் இளம் நாஜிக்களாக மாறுவார்கள் என்று நம்பினார்கள். சிறுவர்களுக்கு நாஜிக்களின் விழுமியங்கள்(Values) கற்பிக்கப்பட்டன மற்றும் அவர்கள் போருக்குத் தயார்படுத்தப்பட்டனர். பெண்களுக்கு சமையல் மற்றும் தையல் போன்ற திறன்கள் கற்பிக்கப்பட்டன.
கடந்த 1938ஆம் ஆண்டு, நவம்பர் 8ஆம் தேதி மிகவும் முக்கியமானது. அன்றுதான் யூத மக்களுக்கு எதிராக பயங்கரமான வன்முறை நடந்தது. இது கிரிஸ்டல்நாக்ட் – ‘உடைந்த கண்ணாடியின் இரவு’ என்று அறியப்படுகிறது.
அன்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் ரெய்டு செய்யப்பட்ட கடைகளில் இருந்து உடைந்து தெருக்களில் கிடந்த கண்ணாடிகளின் காரணமாக இந்தப் பெயர் வந்தது.
இதில் 91 யூதர்கள் கொல்லப்பட்டனர். 30,000 பேர் கைது செய்யப்பட்டு வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். 267 ஜெப ஆலயங்கள் அழிக்கப்பட்டன.
செப்டம்பர் 1, 1939இல், ஜெர்மனி போலந்தில் படையெடுத்தது. இதுவே இரண்டாம் உலகப் போரின் தொடக்கமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.
போலந்தில் உள்ள யூத மக்கள் கெட்டோக்கள் என்று அழைக்கப்படும் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் வாழ கட்டாயப் படுத்தப்பட்டனர். அங்கு அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர் மற்றும் பலர் கொல்லப்பட்டனர்.
அங்கு நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் பலரும் நோய் மற்றும் பட்டினியால் இறந்து போயினர்.
நாஜிக்கள் 1940களின் முற்பகுதியில், மிக குறுகிய காலத்தில் ஐரோப்பாவின் யூத மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்வதற்கான வழியைத் தேடினர்.
அப்போதுதான் ஏராளமான மக்களைக் கொல்லக்கூடிய வதை முகாம்களின் யோசனையைக் கொண்டு வந்தனர். இதைத்தான் அவர்கள் ‘இறுதி தீர்வு’ என்று அழைத்தனர். 1941ஆம் ஆண்டின் இறுதியில், போலந்தில் செல்ம்னோ என்று அழைக்கப்படும் முதல் வதை முகாம் அமைக்கப்பட்டது.
நாஜிக்களால் கட்டுப்படுத்தப்பட்ட போலந்தின் பகுதிகளில் மொத்தம் ஆறு வதை முகாம்கள் இருந்தன: ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் (மிகப் பெரியது), பெல்செக், செல்ம்னோ, மஜ்டானெக், சோபிபோர் மற்றும் ட்ரெப்ளிங்கா.
போலந்துக்கு வெளியே (பெலாரஸ், செர்பியா, யுக்ரேன் மற்றும் குரோஷியாவில்) நாஜிக்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளால் முகாம்கள் தொடங்கப்பட்டன. அங்கு பல நூறாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
உலகம் இதுவரை கண்டிராத அளவில் 1941 மற்றும் 1945ஆம் ஆண்டுக்கு இடையில், மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான மக்கள் முகாம்களுக்கு ரயில் மூலம் அனுப்பட்டனர். அங்கு அவர்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள்.
ஹோலோகாஸ்டில் கொல்லப்பட்டவர்கள் அல்லது துன்புறுத்தப்பட்டவர்கள் யார்?
பாதிக்கப்பட்டவர்கள்
யூதர்கள்
ரோமா மற்றும் சிந்திக்கள் (‘ஜிப்சிகள்’)
ஸ்லாவிக் மக்கள், குறிப்பாக சோவியத் யூனியன், போலந்து மற்றும் யூகோஸ்லாவியாவை சேர்ந்தவர்கள்.
மாற்றுத் திறனாளிகள்
பால் புதுமையினர்
கருப்பின மக்கள்
யெகோவாவின் சாட்சிகள்
அரசியல் எதிரிகள்
ஹோலோகாஸ்ட் எப்படி முடிவுக்கு வந்தது?
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராகப் போரிட்ட பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் அவர்களது நட்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் நாஜிக்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஐரோப்பாவின் பகுதிகள் வழியாகச் செல்லும்போது, இந்த வதை முகாம்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கினர்.
நாஜிக்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பது முன்பே தெளிவாகத் தெரிந்ததால், அவர்கள் இந்த முகாம்களை அழிப்பதன் மூலம் தங்கள் குற்றங்களுக்கான ஆதாரங்களை மறைக்க முயன்றனர்.
அவர்கள் போலந்தில் மீதமிருந்த கைதிகளை ஜெர்மனியில் உள்ள முகாம்களுக்குத் திரும்பிச் செல்லும்படி கட்டாயப்படுத்தினர். இந்தக் கடினமான பயணத்தில் பல கைதிகள் உயிரிழந்தனர்.
நாஜிக்களால் தாங்கள் செய்ததை மறைக்க முடியவில்லை. அதேநேரம் இந்த இனப்படுகொலையின் கொடூரம் எவ்வளவு ஆழமானது என்பதை உலகம் அறிந்துகொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படவில்லை.
மஜ்தானெக் தான் 1944 கோடைக்காலத்தில் விடுவிக்கப்பட்ட முதல் முகாம். முகாம்களில் இருந்தவர்களை விடுவிக்கச் சென்ற மக்கள், அங்கு தாங்கள் எதிர்கொண்ட கொடூரமான காட்சிகளைப் பற்றிப் பேசியுள்ளனர்.
முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பலர் முகாமில் நடந்த சித்திரவதையின் காரணமாக நோய்வாய்ப்பட்டு விடுதலைக்குப் பின் இறந்து போயினர்.
அவர்களுக்கு யுத்தம் முடிவடைந்த பின்னரும்கூட வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது.
தப்பிப் பிழைத்தவர்கள் பலரும் தங்கள் வீடுகளில் வேறு யாரோ வசிப்பதைக் கண்டனர். மேலும் வாழ்வதற்கான வேறு இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான அகதிகளை ஏற்றுக்கொள்ள பிற நாடுகளும் விரும்பவில்லை.
ஹோலோகாஸ்ட் குற்றத்திற்காக நாஜிக்கள் தண்டிக்கப்பட்டனரா?
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 1946ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி, சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலையை குற்றம் என்று தீர்ப்பளித்தது.
போர் முடிவதற்குள் அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதால் அவரை நீதியின் முன் நிறுத்த முடியவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின் வந்த ஆண்டுகளில், நாஜிக்களின் மீது அவர்கள் செய்த குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டது.
சமீபத்தில் ஜூலை 2015இல் கூட, ஆஷ்விட்ஸில் காவலராகப் பணிபுரிந்த 94 வயதான ஆஸ்கர் க்ரோனிங்கிற்கு அவரது குற்றங்களுக்காக தண்டனை வழங்கியது ஜெர்மன் நீதிமன்றம். ஆனால் அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவது சாத்தியமாகவில்லை.
பல நாஜிக்கள் போருக்குப் பிறகு தலைமறைவாகினர். அதற்குப் பின் அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது அவர்களின் குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டனர்.
இனப்படுகொலையை நினைவில் கொள்வது எப்படி?
தற்போது, இந்த இனப்படுகொலையின் தீவிரம் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்றாக உள்ளது. மேலும் இனப்படுகொலையின் கொடூரங்களுக்கும், சில நடத்தைகள் எப்படி வழிநடத்தக்கூடும் என்பதற்கும் இதுவோர் எடுத்துக்காட்டு.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இது ஒன்றும் இனப்படுகொலை வரலாற்றில் நடந்த ஒரே இனப்படுகொலை அல்ல. கம்போடியா, ருவாண்டா, போஸ்னியா மற்றும் டார்பூர் ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் இன அடையாளத்திற்காகவே கொல்லப்பட்டுள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 27 அன்று, பிரிட்டனில் உள்ள மக்கள் ஹோலோகாஸ்ட் நினைவு தினத்தைக் கடைபிடிக்கின்றனர். 1945இல் சோவியத் ராணுவத்தின் வீரர்களால் மிகப்பெரிய நாஜி வதை முகாமான ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் விடுதலை செய்யப்பட்ட நாளில் இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஹோலோகாஸ்ட் நினைவு நாள் என்பது இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கானவர்களை நினைவுகூர்வது மட்டுமின்றி, உலகெங்கிலும் நடத்தப்பட்டுள்ள இதர இனப்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களையும் நினைவுகூரும் தினமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் மற்றவர்களின் நம்பிக்கைகள் மற்றும் வேறுபாடுகளை சகித்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும், மக்களை ஒதுக்கி வைப்பதோ அல்லது வெறுப்பு செய்தியைப் பரப்புவதோ தவறு என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
இது ஹோலோகாஸ்டில் நடந்தவற்றை ஒருபோதும் மக்கள் மறக்காமல் இருக்கவும், மீண்டும் இதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் நடக்காமல் தடுக்கவும் உதவுகிறது.
இந்த நாள் எப்படி ஒரு “பாதுகாப்பான, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவதற்கான நாள்” என்பதை விளக்குகிறது ஹோலோகாஸ்ட் நினைவு நாள் அறக்கட்டளை.
பிபிசி தமிழ்