1917 ரஷ்ய புரட்சியை நேரில் பார்த்த சாட்சியாக, அதைப் பற்றி எழுதிய அமெரிக்க பத்திரிகையாளர் ஜான் ரீட், தான் எழுதிய கட்டுரைக்கு உலகை உலுக்கிய 10 நாட்கள் என தலைப்பிட்டார்.

ஆனால் டொனால்ட் டிரம்புக்கும், விளாடிமிர் புதினுக்கும் 10 நாட்கள் என்பது மிக நீண்ட காலம். அவர்கள் ஒரு வாரத்திலேயே அனைத்து விஷயங்களையும் அசைத்துப் பார்த்திருக்கிறார்கள்.

அது பிப்ரவரி 12ஆம் தேதி புதின்-டிரம்ப் தொலைபேசி உரையாடல் மற்றும் இருதரப்பு உறவுகளை தொடரவிருப்பதாக அவர்கள் அறிவித்த வாக்குறுதிகளுடன் தொடங்கியது.

ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டிலும், ஐரோப்பா – அமெரிக்கா இடையேயான பிளவிலும் இது தொடர்ந்தது.

அடுத்தபடியாக, சௌதி அரேபியாவில் ரஷ்யா-அமெரிக்கா பேச்சுவார்த்தை: ரஷ்யா யுக்ரேன் மீது முழு வீச்சில் படையெடுத்த பின்னர், இரு நாடுகளுக்கிடையில் முதல் முறையாக நடைபெற்ற உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தை இது. இதில் யுக்ரேன் பங்கேற்கவில்லை.

“நாங்கள் இடம் பெறாத எந்தவொரு அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம்” என்று யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா – ரஷ்யா இடையே 3 விஷயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படின், யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியுடன் பேச ரஷ்ய அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்கள், பாரம்பரிய கூட்டணிகளை தலைகீழாக கவிழ்த்துப்போட்டு, ஐரோப்பாவையும், யுக்ரேனையும் பதில் தேட வைத்து ஐரோப்பாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளன.

உலக அரசியலில் முதன்மையிடத்தில் இருக்கவேண்டும் என ரஷ்யா விரும்பியதற்கு ஏற்ப, அந்த இடத்தை எந்த சலுகைகளையும் கொடுக்காமல் எட்டிய வாரம் இது.

‘எதிரிகளாக இருப்பதை நிறுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது’

அமெரிக்கா - ரஷ்யா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்

ரஷ்யாவில் திங்கட்கிழமை காலை செய்தித்தாள்களில் பிரதானமாக இடம்பெற்ற படம்- ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ரியாத்தில் பேச்சுவார்த்தைக்காக அமர்ந்திருந்த காட்சிதான்.

யுக்ரேன் யுத்தத்துக்காக ரஷ்யாவை தனிமைப்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி தோல்வியடைந்துவிட்டது என்பதை ரஷ்ய மக்களும், சர்வதேச சமுதாயமும் காணவேண்டும் என ரஷ்யா விரும்புகிறது.

அமெரிக்காவுடன் நல்லுறவு என்பதை வரவேற்கும் ரஷ்ய ஊடகங்கள் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் யுக்ரேன் குறித்து இகழ்கின்றன.

“யுக்ரேனில் வெற்றிபெற்றுக்கொண்டிருக்கும் பக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதால், (ரஷ்யாவுக்கு) சலுகைகளை வழங்கவேண்டியிருக்கும் என டிரம்புக்கு தெரியும்,” என ரஷ்ய ஆதரவு இதழ் மாஸ்கோவ்ஸ்கி காம்சோமோலெட்ஸ் எழுதியுள்ளது.

“அவர் சலுகைகள் தருவார். ஆனால் அமெரிக்காவுக்கு பாதகமாக அல்ல, மாறாக ஐரோப்பா மற்றும் யுக்ரேனுக்கு பாதகமாக தருவார்.”

“நீண்ட காலமாக ஐரோப்பா, தன்னைத் தானே நாகரீக உலகமாகவும், சொர்க்கபூமியாகவும் நினைத்துக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி நடந்துகொண்டிருந்தது. ஆனால், அந்த மதிப்பை ஐரோப்பா இழந்துவிட்டதை உணரத் தவறிவிட்டது. இப்போது அட்லாண்டிக் கடலின் அக்கரையில் உள்ள அதன் பழைய தோழர் அதை சுட்டிக்காட்டியுள்ளார்”

ஆனால் மாஸ்கோவின் தெருக்களில் இந்த அளவு அவலமான மகிழ்ச்சியை நான் காணவில்லை.

மாறாக, டிரம்ப் உண்மையில் ரஷ்யாவின் புதிய நெருங்கிய நண்பராக மாறுவாரா, அவர் உண்மையில் யுக்ரேன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவாரா என்பதை பார்க்க மக்கள் காத்திருக்கிறார்கள்.

“டிரம்ப் ஒரு தொழிலதிபர். பணம் சம்பாதிப்பதில் மட்டும்தான் அவருக்கு ஆர்வம் இருக்கிறது,” என நடேஸ்டா என்னிடம் சொல்கிறார். “விஷயங்கள் எந்த வகையிலும் வேறாக இருக்கும் என நினைக்கவில்லை. சூழ்நிலையை மாற்ற ஏராளமான விஷயங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது.”

“ஒருவேளை (சௌதி அரேபியாவில் நடைபெற்ற) இந்த பேச்சுவார்த்தைகள் உதவக்கூடும்,” என்கிறார் கியோர்கி. “நாம் எதிரிகளாக இருப்பதை நிறுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது.”

அமெரிக்கா – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தை

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ்

சௌதி அரேபியாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா – ரஷ்யா இடையே 3 விஷயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் கூறினார்.

அவரது கூற்றுப்படி, முதலாவதாக இரு நாடுகளும் விரைவில் ஒருவருக்கொருவர் தூதர்களை நியமிக்கும். தூதரகங்களுக்கான வங்கி பரிமாற்றங்கள் மீதான கட்டுப்பாடுகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜ தந்திர பணிகளுக்கான தடங்கல்கள் நீக்கப்படும்.

இரண்டாவதாக, யுக்ரேனுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தேவையான செயல்முறைகள் தொடங்கப்படும் என்றும், இதற்காக அமெரிக்கா அதன் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்றும், அதன் பிறகே ரஷ்யா அதன் பிரதிநிதிகளை நியமிக்கும் என்றும் செர்கே லாவ்ரோவ் கூறினார்.

மூன்றாவதாக, பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே முழு ஒத்துழைப்பைத் தொடங்கவும், மேம்படுத்தவும் தேவையான சூழல் உருவாக்கப்படும்.

“இது மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தையாக இருந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் சொல்வதைக் கவனித்துக் கேட்டோம்’, என்று லாவ்ரோவ் கூறினார்.

‘டிரம்ப் ஏதாவது செய்வாரா?’

2019-ல்

 நடைபெற்ற ஜி20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை டொனால்ட் டிரம்ப் சந்தித்தார்

“டிரம்ப் செயல்படுகிறார். உத்வேகத்துடன் இருக்கிறார். ஆனால் அவர் ஏதாவது செய்வாரா?” என வினவுகிறார் ரஷ்யாவைச் சேர்ந்த ஐரீனா.

“இந்த பேச்சுவார்த்தைகள் அமைதியை கொண்டுவரும் என கனவு காண்கிறோம். இது ஒரு முதல் படி. ஒருவேளை இது நமது பொருளாதாரத்துக்கு உதவக்கூடும். உணவு மற்றும் பிற பொருட்களின் விலை இங்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதற்கு சிறப்பு ராணுவ நடவடிக்கை (யுக்ரேனில் நடைபெறும் யுத்தம்) மற்றும் பொதுவான சர்வதேச சூழல் ஒரு காரணம்” என்கிறார் அவர்.

புதினும், டிரம்பும் (பிப்ரவரி 12 அன்று) தொலைபேசியில் பேசினர். ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த உரையாடலில், யுக்ரேன் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

அதன் பின்னர், அவர்களது குழுவினர் (பிப்ரவரி 18 அன்று) சௌதி அரேபியாவில் சந்தித்துள்ளனர். அதிபர் அளவில் பேச்சுவார்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் மாஸ்கோவிஸ்கி காம்சோமோலெட்ஸ் செய்தித்தாள், இரண்டு தலைவர்களுக்கு கடந்த வார தொலைபேசி உரையாடலில் ஒருவரிடம் ஒருவர் என்ன சொல்லியிருப்பார்கள் என கற்பனை செய்ய முயன்றிருந்தது. அவர்களுடைய கற்பனை இதுதான்:

“டிரம்ப் புதினை அழைத்தார்.

விளாதிமிர்! நீங்கள் ஒரு அற்புதமான நாட்டை வைத்திருக்கிறீர்கள், நான் ஒரு அற்புதமான நாட்டை வைத்திருக்கிறேன். நாம் சென்று உலகத்தைப் பிரிப்போமா?”

“இவ்வளவு நாள், நான் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேன்? செய்வோம்!….”

இது கற்பனையா? பொறுத்திருந்து பார்ப்போம்..

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Share.
Leave A Reply

Exit mobile version