“ஐந்து பேர் கொண்ட செயற்குழுவே 1980 இன்முற்பகுதி வரை புலிகளது தலைமையாக இருந்தது.அந்த செயற்குழுவின் தலைவராக உமா மகேஸ்வரன் இருந்தார். இராணுவத் தளபதியாகவும் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். பிரபாகரன் சில கட்டுப்பாட்டு விதிகள்,வரையறைகள் விதித்தே செயற்பட்டு வந்தார். புகைபிடிக்கக்கூடாது, காதலிக்கக்கூடாது, வீண்செலவுகள் கூடாது, இரகசியங்களை வெளியிடக்கூடாது,கட்டுப்பாட்டை மீறக்கூடாது போன்ற விடயங்களைக் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் பிரபாகரன்…..
…………………………………………………..
பிரபா மீது அமுதரின் நம்பிக்கை – வீரதுங்காவுக்கு ஜே.ஆர். போட்ட உத்தரவு
தொண்டர்கள் பாய்ந்தனர்.
மாநாட்டில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த இளைஞர்களை தனக்கு எதிரானவர்கள் என்றே அமிர் தீர்மானித்துவிட்டார்.
“தொண்டர்களே என்ன செய்கிறீர்கள்?” என்று அமுதர் ஒலிபெருக்கியில் கேட்டது தனது ஆதரவாளர்களை உசுப்பிவிடுவதற்காகத் தான்.
கூட்டத்தின் மத்தியிலிருந்து ஒரு தொண்டர் எழுந்தார். அவரை ஒரு குண்டர் என்றும் வர்ணிக்கலாம். வாட்டசாட்டமாக இருந்தார்.
பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவரை அவர் சட்டையில் பிடித்து ஒரு அடி கொடுத்து பிரசுரங்களைப் பறித்தார் அந்த தொண்டர்.
அடி வாங்கியவரின் பெயர் சுந்தரலிங்கம்.அவரது மூக்குக் கண்ணாடியும் பறிக்கப்பட்டது.
மேடையிலிருந்து இவற்றையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்தார் தளபதி அமிர்.
பிரசுரம் விநியோகித்தவரைத் தாக்கிய தொண்டரை அழைத்துப் பேச நினைத்தார்கள் சம்பந்தப்பட்ட இளைஞர்கள்.
கூட்டத்தின் மத்தியில் சென்று அந்த தொண்டரைப் “பேசவேண்டும் வாருங்கள்” என்று அழைத்து வந்தார்கள். வந்தார் தொண்டர். பேசவில்லை. பிரசுரம் கொடுத்த அந்த இளைஞர்கள் மீது அந்த தொண்டர் தாக்குதலை ஆரம்பித்து வைத்தார்.
கூட்டணி விசுவாசிகளால் சுற்றி வளைத்து தாக்கப்பட்டார்கள் ஊர்வலம் வந்த இளைஞர்கள்.
ஈழ விடுதலை இயக்கத் தலைவர் முத்துக்குமாரசுவாமி அதே இயக்கத்தில் இருந்த கோவை நந்தன் போன்றவர்கள் தமது ஆட்கள் தாக்கப்பட்டதை தடுக்கவும் பயந்து கூட்டத்திற்குள் பதுங்கிக் கொண்டார்கள்.
அமுதரின் தொண்டர்களாக தாக்குதல் நடத்தியவரில் முக்கியமானவர் பரந்தன் ராஜன்.
இவர் தான் புளொட் அமைப்பிலிருந்து விலகி ஈஎன்டிஎல்எவ் அமைப்பிற்கு தலைவராக இருந்தவர். சொந்தப் பெயர் ஞானசேகரன்.
ஞானசேகரன் மட்டுமல்ல பிரபாகரன் உட்பட தமிழ் இயக்கங்களது தலைவர்களாகவும் முக்கியமானவர்களாவும் இருந்தவர்கள் இருப்பவர்கள் பலரும் ஆரம்பத்தில் அமுதரின் விசுவாசிகளாகவே இருந்தார்கள்.
வாயடைக்கும் தந்திரம்
ஆவரங்கால் மாநாட்டில் தமிழீழ தேசிய மன்றத்தைக் கூட்டுவதற்கான குழு ஒன்று அமைக்கப்பட்டது. கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்கக் கோவை தயாரிக்கவும் ஒரு குழு நியமிக்கப்பட்டது.
இந்த இரண்டு குழுக்களிலுமே வண்ணை ஆனந்தன் இடம்பெற்றார். இது ஒரு சிறந்த தந்திரம் சில கருத்துக்கள் உரமாக முன்வைக்கப்படும்போது அதனை ஏற்பது போல நடிப்பது ஆனால் நிறைவேற்றாமல் இருந்து விடுவது.
கருத்து முன்வைப்போரை சமாளிக்க ஒரு கமிட்டி அமைத்து அந்தக் கமிட்டியில் அவர்களை உறுப்பினர்களாகப் போட்டுவிடுவது
“தமிழீழ தேசிய மன்றத்தை கூட்டு” என்றார் வண்ணை ஆனந்தன். அந்த மன்றத்தைக் கூட்டும் குழுவில் அவரும் ஒருவராக இருப்பதால் இனி சத்தம் போடமாட்டார்.
இளைஞர்களை தந்திரமாக சமாளிக்க தலைவர்கள் கையாண்ட தந்திரங்களில் இதுவும் ஒன்று.
வண்ணை ஆனந்தன் பின்னர் வாயே திறக்கவில்லை. சர்வதேச பிரச்சாரம் நடத்தவென்று ஜெர்மனுக்கு சென்று அங்கு நிரந்தரமாக தங்கிவிட்டார்.
மரம் பழுத்தால் வெளவால் வரும் என்றவர் பழுக்க முன்னரே பறந்துவிட்டார்.
இளைஞர் பேரவையில் பிளவு
இளைஞர்களைக் கட்டுப்படுத்த தளபதி அமிர் அடிக்கடி கூறும் வார்த்தை ஒன்று மிகப் பிரபலமானது. “போர்க்களத்தில் தளபதியின் கட்டுப்பாட்டை மீறி முன்னால் ஓடுபவனுக்குத் தான் முதற் சூடு”! மிக உண்மையான கருத்துத் தான்.
ஆனால் 1977 இல் ஜெயவர்த்தனா அரசாங்கம் பதவிக்கு வந்தது. தளபதி மௌனமானார்.
ஜே.ஆர்.புத்திசாலி. புன்னகை செய்தே எதிரிகளை நிராயுதபாணிகளாக்கிவிடுவார்.
1977 இன் பின்னர் பொதுமக்கள் பங்கு கொள்ளும் அகிம்சைப் போர்க்களம் எதற்கும் தளபதி அமிர் அழைப்பு விடுக்கவில்லை.
அரசுக்கு அறிவித்துவிட்டு சுவரொட்டி ஒட்டி, துண்டுப்பிரசுரம் விநியோகித்து கைதாகும் போராட்டங்கள் மட்டும் நடத்தினார்கள்.
“போர்க்களத்தில் தானே முன்னால் ஓடக்கூடாது. போர்க்களமே இல்லையே, பின்னர் தளபதிக்கு கட்டளைக்கு எங்கே இடம்?” என்று நினைத்தார்களோ என்னவோ 78 ஆம் ஆண்டு யாழ்.முற்றவெளியில் தமிழ் இளைஞர் பேரவை ஒரு கூட்டம் நடத்தியது.
அதற்கு தலைமை தாங்கியவர் சந்ததியார்.
இவர் தான் புளொட் அமைப்பின் தலைவர்களில் ஒருவராக இருந்து உள்முரண்பாட்டால் கொல்லப்பட்டவர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமை மீது நம்பிக்கையீனம் தெரிவித்து கூட்டத்தில் பேசப்பட்டது.
“தேர்தலுக்காகவே தமிழீழக் கோசம் தலைவர்களுக்குத் தேவைப்படுகின்றது”என்றெல்லாம் கூட்டத்தில் பேசியவர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள்.
“தமிழ் இளைஞர் பேரவை இனி தனிவழியே செல்லும்”என்றார் சந்ததியார்.
தமிழ் இளைஞர் பேரவைத் தலைவராக இருந்தவர் மாவை சேனாதிராஜா
அமுதர் விசுவாசியாக இருந்த மாவை சேனாதிராஜா மூலமாக தமிழ் இளைஞர் பேரவை தனி வழி செல்லாமல் தடுத்தார் அமுதர்.
இளைஞர் பேரவையிலிருந்து சந்ததியார், இரா.வாசுதேவா, இறைகுமாரன், யோகநாதன் போன்ற பலர் வெளியேறினர்.
தமிழ் இளைஞர் பேரவை (விடுதலை அணி) என்ற பெயரில் அவர்கள் தனி அமைப்பாக இயங்கத் தொடங்கினார்கள்.
கோவை மகேசன்
தந்தை செல்வநாயகத்தால் தமிழரசுக்கட்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரன்
பின்னர் தினபதி ஆசிரியராக இருந்து தமிழர் விடுதலைக்கூட்டணியையும் ஈழப்போராட்டத்தையும் கண்டித்தும் கேலி செய்தும் எழுதியவர் சிவநாயகம். இவர் தான் முதலில் சுதந்திரன் ஆசிரியராக இருந்தவர்.
அதன் பின் சுதந்திரன் ஆசிரியராக இருந்தவர் கோவை மகேசன்.
கோப்பாய் தொகுதியைச் சேர்ந்த மகேஸ்வர சர்மா தனது பெயரை சுருக்கி கோவை மகேசன் என்று வைத்துக் கொண்டார்.
தமிழரசுக்கட்சியின் ஏடாக இருந்த சுதந்திரன் தமிழர் விடுதலைக்கூட்டணியின் ‘குரலாக’ மாறியது.
‘அரசியல் மடல்’என்ற பெயரில் கோவை மகேசன் எழுதிய கட்டுரைகள் இளைஞர்கள் மத்தியில் எழுச்சி விதைகளை தூவியதை மறுக்க இயலாது.
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு தளபதி அமிர்,தமிழீழ முதல்வர் அமிர், சிந்தனைச் சிற்பி,கர்மவீரர், எல்லைக்காவலன், உடுப்பிட்டிச் சிங்கம் (பின்னர் திரு.சிவசிதம்பரம் நல்லூர் தொகுதியில் தேர்தலில் நின்றதால் உடுப்பிட்டிச் சிங்கம் என்ற பட்டம் வாபஸ் பெறப்பட்டது.), உணர்ச்சிக் கவிஞர்,அடலேறு போன்ற பட்டங்களைப் பிரபலமாக்கியதும் சுதந்திரன் தான்.
அமிர்தலிங்கம் கூட்டத்தில் பேசினால் சுதந்திரன் இப்படித் தான் செய்தி போடும்.
“தமிழீழ முதல்வர் அமிர் முழக்கம்”
மு.சிவசிதம்பரம் அரசைக் கண்டித்தால் அந்த வார சுதந்திரன் செய்தி இப்படி வரும்
“உடுப்பிட்டி சிங்கம் ஸ்ரீலங்கா அரசுக்கு எச்சரிக்கை”
அதே போல தமிழர் விடுதலைக் கூட்டணியின் எதிரிகளை அக்குவேறு ஆணிவேறாக கிழிப்பதிலும் சுதந்திரன் முன்னால் நின்றது
சுதந்திரன் பாய்ச்சல்
அந்த சுதந்திரன் பத்திரிகை தான் 1977 இன் பின்னர் கூட்டணித் தலைவர்களது போக்கு சரியில்லை என்று எழுதத் தொடங்கியது.
கூட்டணித் தலைவர்கள் ஜே.ஆர். பின்னால் சென்று சுதந்திரப் பயிரை வாட வைக்கின்றார்கள் என்று வருத்தப்பட்டார் கோவை மகேசன்.
தனது அரசியல் மடலில் கோவை மகேசன் வருத்தத்தோடு நினைவ+ட்டிய பாரதியார் பாடல் வரிகள் இவை
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ?” இவற்றையெல்லாம் கூட்டணித் தலைவர்கள் கண்டுகொள்ளவேயில்லை.
இளைஞர்களது கோபத்தை அமுதர் அலட்சியம் செய்தமைக்கு ஒரு காரணம் இருக்கின்றது.
புலிகள் இயக்கம் தமது கையைவிட்டுப் போகாது என்று அமிர் நம்பியிருந்தார்.
அப்போது தம்பி, கரிகாலன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டவர் பிரபாகரன்.
தம்பியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று நினைத்தார் அமிர். அதனால் பிரபாகரனுடன் நெருக்கமாக தொடர்புகளையும் வைத்திருந்தார்.
அடக்குமுறைச் சட்டம்
இதேநேரத்தில் 1979 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா படுமோசமான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்.
78ம் ஆண்டு ஜே.ஆர் அரசு கொண்டு வந்த புலிகள் தடைச்சட்டத்தை விடவும் மிகக் கொடுமையான சட்டம் அது.
1979ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் திகதி அமுலுக்கு கொண்டு வரப்பட்ட அச்சட்டம் ‘பயங்கரவாத தடைச்சட்டம்’என்று அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜுரிமார் இல்லாமல் வழக்கு விசாரணை நடத்த அந்தச் சட்டம் இடமளித்தது.
18மாத காலத்திற்கு சந்தேக நபர் ஒருவரை வெளியுலகத் தொடர்பே இல்லாமல் சிறையில் வைத்திருக்கவும் வழி செய்தது.
சித்திரவதை மூலம் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை சான்றாக பாவிக்க நீதிமன்றத்திற்கு அனுமதியளித்தது.
எவர் வீட்டுக்குள் புகுந்தும் தேடுதல் நடத்தலாம்.எவரையும் கைது செய்யலாம்.
சுருக்கமாகச் சொன்னால் தமிழ் பேசும் மக்களது போராட்டத்தை ஈவிரக்கமற்ற முறையில் கொலை செய்ய ஜே.ஆர்.கொண்டு வந்த சட்டம் அது.
ஆயுதப்படைகளது கரங்களை சுதந்திரமாக்கி வடக்கில் ஒரு வேட்டைக்கான மறைமுக அனுமதி வழங்கப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறைவேற்றிய சூட்டோடு சூடாக யாழ்ப்பாணத்தில் அவசரகாலநிலையை அரசு பிரகடனம் செய்தது.
பிரிகேடியர் வீரதுங்காவை அழைத்தார் ஜே,ஆர்.
“யாழ்.மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் முழுப்பொறுப்பும் உங்களுக்கு வழங்கப்படுகின்றது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு (1979)முன்னர் நாட்டிலிருந்து குறிப்பாக யாழ்.மாவட்டத்திலிருந்து வன்செயல்கள் ஒழிக்கப்படவேண்டும்.” உத்தரவிட்டார் முப்படைத் தளபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.
யாழ்ப்பாணம் சென்ற பிரகேடியர் வீரதுங்கா சட்டத்தின் பலத்துடன் பயங்கரவாத ஆட்சி ஒன்றை நடத்திக் காட்டினார்.
இன்பம் – செல்வம் கொலை
நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இன்பம்- செல்வம் உட்பட பல இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு பிணமாக வீதியில் வீசியெறியப்பட்டனர்.
யாழ்.குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்தன.ஜே.ஆர்.கண்டு கொள்ளவேயில்லை.
அடக்குவதாக நினைத்துக் கொண்டு தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தை நோக்கி தட்டியெழுப்பினார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.
இயக்கங்களது முக்கிய தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றனர்.
1979- 80 காலப்பகுதியில் ஆயுதமேந்திய இயக்க நடவடிக்கைகள் சற்றே ஓய்ந்திருந்தன.
1980இன் முற்பகுதியில் புலிகள் இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிளவும் அதற்கு காரணம்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட முதல்; பிளவு அது தான்.
ஐந்து பேர் கொண்ட செயற்குழுவே 1980 இன்முற்பகுதி வரை புலிகளது தலைமையாக இருந்தது.
பிரபாவின் வரையறைகள்
அந்த செயற்குழுவின் தலைவராக உமா மகேஸ்வரன் இருந்தார். இராணுவத் தளபதியாகவும் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.இதனை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றேன்.
பிரபாகரன் சில கட்டுப்பாட்டு விதிகள்,வரையறைகள் விதித்தே செயற்பட்டு வந்தார். புகைபிடிக்கக்கூடாது, காதலிக்கக்கூடாது, வீண்செலவுகள் கூடாது, இரகசியங்களை வெளியிடக்கூடாது,கட்டுப்பாட்டை மீறக்கூடாது போன்ற விடயங்களைக் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் பிரபாகரன்.
ஆனால் உமாமகேஸ்வரன், நாகராசா போன்றவர்கள் இவற்றை விரும்பவில்லை.
இதேசமயம் ஊர்மிளாதேவி புலிகள் அமைப்பின் தீவிர உறுப்பினராக செயற்பட்டுக் கொண்டிருந்தார்.
ஊர்மிளா தேவி விடயத்தில் ஒரு பிரச்னை ஆரம்பமானது.
(தொடரும்)
அற்புதன் எழுதுவது