சேலம்: காதலியின் செல்போன் நம்பரை அவரது தங்கை தராததால் கொலை செய்தேன் என்று மாணவியின் அக்காவின் காதலன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் அழாகாபுரன் பெரியபுத்தூர் வன்னியர் நகரைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகள் தேஜாஸ்ரீ கடந்த 13ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது மர்மநபர்களால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என தேஜாஸ்ரீயின் குடும்பத்தார் கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். இதற்கிடையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடலை பெற்றுக்கொண்டனர்.
அதன் பிறகு சேலம் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் இதற்கென ஒரு தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார்.
ஆரம்பம் முதலே தேஜாஸ்ரீயின் அக்காவான ஹரிணியை காதலித்து வந்த யுகாதித்தனை சந்தேகித்தது காவல்துறை. முதற்கட்டமாக அவரிடம் நடத்திய விசாரணையில் ஹரிணியை திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்கள் குடும்பத்தார் பிரித்துவைத்துவிட்டதாகவும் கொலை நடந்த அன்று ஊரில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
அதன்பிறகு அவரை காவல்துறையினர் விடுவித்துவிட்டனர்.
ஹரிணியிடம் விசாரித்ததில் திருமணமெல்லாம் நடக்கவில்லை நான் அவனை காதலிக்கவே இல்லையென்று தெரிவித்தார். தேஜாஸ்ரீயின் பள்ளி வேன் டிரைவர் என காவல்துறை பலதரப்பில் விசாரணை நடத்திவந்த போதும் யுகாதித்தனின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது காவல்துறை.
செல்போன் சிக்னல், கொலை நடந்த அன்று தேஜாஸ்ரீ வீட்டிற்கு வந்த இரண்டு பேர் ஓட்டிவந்த பல்சர் பைக் இவைகளை குறிவைத்து விசாரணையில் குதித்த காவல்துறை, தேஜாஸ்ரீயை கொலை செய்தது ஹரிணியை காதலித்து வந்த யுகாதித்தன் தான் என்பதை உறுதிப்படுத்தியது.
யுகாதித்தன் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர். யுகாதித்தனும் அவனது நண்பன் சசியும்தான் அந்த கொலையை செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட காவல்துறை ஆணையர் அமல்ராஜிடம் கேட்டபோது, “யுகாதித்தன் ஹரிணியை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். ஹரிணி சென்னைக்கு வேலைக்கு சென்றபிறகு ஹரிணியின் போன் நம்பர் வாங்குவதற்காக அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டில் தேஜாஸ்ரீ தனியாக இருந்த சமயம் பார்த்து சென்றிருக்கிறார். ஆனால் தேஜாஸ்ரீ போன் நம்பரை கொடுக்க மறுத்திருக்கிறார். அதனால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அவருக்கு உடந்தையாக அவரது நண்பன் சசி என்பவரரும் இருந்திருக்கிறார். இருவரையும் கைது செய்துவிட்டோம்” என்றார்.