ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக இருப்பவர் நிக்கி ஹாலே. 44 வயதான இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். குடியரசுக் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில், நிக்கி ஹாலேவை, ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்க, டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். தன்னை விமர்சிக்கக்கூடிய நபராக இருந்தாலும், அவரது செயல்பாடுகள் சர்வதேச அரங்கில் பாராட்டப்பட வேண்டியவை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
செனட் ஒப்புதல் அளித்த பிறகு அவர் அதிகார்பூர்வமாக ஐ.நா.வுக்கான அமெரிக்க துாதராக நியமிக்கப்படுவார். இதையடுத்து, ட்ரம்ப் நிர்வாகத்தில் இணையும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமை இவருக்கு கிடைக்க உள்ளது.
தேசிய அளவில் செயல்பட வேண்டிய திறமைசாலி இவர் என்று டிரம்ப் ஆலோசகர்கள் அவருக்கு எடுத்துரைத்ததாகவும், அதன் காரணமாக டிரம்ப் நிக்கியைத் தேர்ந்தெடுத்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வின்போது, டொனால்ட் டிரம்ப்புக்கு நிக்கி ஹாலே ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா பவரிடம் இடத்தில்..
ஜனாதிபதியுடன் சமந்தா பவர்
இந்திய வம்சாவளிப் பெண்ணான நிக்கி ஹாலே, டொனால்ட் ட்ரம்ப், வரும் ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்ற பின்னர், ஐ.நாவுக்கான தற்போதைய தூதுவர் சமந்தா பவரிடம் இருந்து அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வார்.
ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் பதவியானது, அமைச்சர் பதவிக்கு இணையானதாகும்.
தற்போது ஐ.நாவுக்கான தூதுவராக பதவி வகிக்கும் சமந்தா பவர், சிறிலங்கா விவகாரத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார் என்பதும், பொறுப்புக்கூறல் விவகாரங்களில் ஆர்வம் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் சமந்தா பவர் கணிசமான பங்கை வகித்திருந்தார்.
அவருக்குப் பதிலாக இந்தப் பதவியை ஏற்கவுள்ள நிக்கி ஹாலே, சிறிலங்கா விவகாரத்தில் எத்தகைய ஆர்வத்தை வெளிப்படுத்துவார் என்பது கேள்விக்குரிய விடயமாகவே உள்ளது.
கடந்த அதிபர் தேர்தலில் தமது கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக, நிக்கி ஹாலே பரப்புரைகளை மேற்கொண்டவர் என்ற போதிலும், அவருக்கு இந்தப் பதவியை வழங்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
நிக்கி ஹாலே வெளிவிவகாரம் தொடர்பான விடயங்களில் போதிய அனுபவமற்றவர் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.